logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 06, 2017
ஆடி மாதத்தில் தண்டுக்கீரையின் பயன்பாடு வழக்கத்தில் வந்த வரலாறு
article image

Color
Share

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதமாக விளங்கும். இந்த சமயத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்து படையிலிடுவது வழக்கம். அப்படி படையலிடும் போது அம்மனுக்கு உகந்த ஒவ்வொரு பொருட்களை வைத்து படையிலிடுவார்கள். அதில் ஒரு வகைக் கீரையான தண்டுக் கீரையையும் சேர்த்து உணவு தயாரிப்பார்கள்.

இந்த தண்டுக் கீரை ஆடி மாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கீரையாகும். இந்த தண்டு கீரை பயன்பாடு எவ்வாறு வந்தது என்பதற்கு ஒரு அற்புத நிகழ்வு உண்டு.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய மன்னர்களில் ஒரு படைப்பிரிவு கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்கியிருந்தனர். அவ்வாறு அவர்கள் பல நாட்கள் தங்கியிருந்தனர். அப்படையில் உள்ள வீரர்களில் ஒரு வீரர் தீவிர அம்மன் பக்தர். அம்மனை நித்தம் வழிபடும் ஒரு தீவிர பக்கர்.

அப்போது, ஒருநாள் இரவில் அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் தான் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள்.

அங்கேயே அம்பாளை வணங்கிய அவர் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தார். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டனர்.

படை வீரர்கள் அம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி, அருகில் காய்த்திருந்த தண்டுக்கீரையை அரைத்து அதில் உள்ள சாறை பிழிந்து அந்த சாறை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் அம்மை நோய் பாதித்த அனைத்து வீரர்களும் பருகினர், அந்த தீர்த்தத்தை பருகிய உடன் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.

இந்த அதிசய நிகழ்வு மெல்ல மக்கள் மத்தியில் பரவி அங்கு வீற்றிருந்த அம்மனுக்கு புதிய ஆலயம் எழுப்பும் பணி தொடங்கப்பட்டு, காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். அத்திருக்கோயில்தான் தண்டு மாரியம்மன் திருக்கோவிலாகும்.

இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

இந்த நிகழ்விற்கு பிறகு தண்டுக்கீரையின் பயன்பாடு ஆடிமாதம்தோறும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் பக்தர்கள் கடைபிடிக்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.

இதே சமயம் தண்டு மாரியம்மன் என்ற பெயருக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. “தண்டு” என்றால் “படை வீரர்கள் தங்கும் கூடாரம்” எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் “தண்டுமாரியம்மன்” என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.

இந்த தண்டுமாரியம்மன்தான் கோவையின் காவல்தெய்வமாக இருக்கிறார்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.