logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 06, 2017
கயிலையை தரிசித்த புண்ணியத்தை தரும் பருவதமலை, ஒருநாள் அபிஷேகம் செய்தால் வருடம் முழுக்க அபிஷேகம் செய்த பலன் தரும் அற்புதம்
article image

Color
Share

சிவனுக்கு உகந்த திருக்கோவில்களில் கடைசி நிலையில் உள்ளது கயிலாயமலை. ஆனால் இந்த கயிலையை தரிசிக்க சிவனுடன் ஐக்கியமாகும் பக்தர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனாலும், பூலோகத்தில் உள்ள ஒரு மலையில் வீற்றிருக்கும் சிவ பார்வதியை 48 பவுர்ணமி, அமாவாசை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கைலாயத்திற்கு இணையான மலையாக திகழ்வதுதான் பருவதமலை. பருவதமலை புராணத்தில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.

இம்மலையில் இன்னும் பல சிறப்புகள் உண்டு. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சமயம் கிடைக்கும்போது நாமும் கைலாயத்திற்கு நிகரான மலைக்கு சென்று சிவபார்வதி தரிசனத்தை பெற்று ஆன்மிக மலராகத் திகழ்வோம்.குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.