logo
home ஆன்மீகம் செப்டம்பர் 13, 2018
விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யப்படுவதன் காரண காரியங்கள்
article image

Color
Share

வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது.
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப்பம் அடைந்தனர்.
இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர். பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத் தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரை யும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.
மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப் பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள்.
பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.


விநாயகருக்கு 21 வகை அர்ச்சனை


விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.
6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
8. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.
12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.
14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
17. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
20. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.