logo
home பலன்கள் அக்டோபர் 07, 2018
ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும்
article image

Color
Share

புரட்டாசி அமாவாசை பிதுர் தர்ப்பண பலன்கள்!
அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம்,பவானி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது.ஹ

சிறப்பு தரும் அமாவாசை அயனத்துக்கு ஓர் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தெற்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை ஆடி அமாவாசை, வடக்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை தை அமாவாசை. ஆன்மிக முன்னேற்றத்துக்கு பித்ருக்களை ஆராதிப்பது கை கொடுக்கும். மனதுக்குத் தெம்பை, மனோபலம், உடல்பலம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆகையால் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும்.எனவே போற்றுதலுக்கு உரிய நம் முன்னோர்களை புரட்டாசி அமாவாசையன்று வழிபட்டு புண்ணியத் தலங்களில் நீராடினால் எண்ணற்ற பலன்களும் புண்ணியங்களும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

பௌர்ணமியில் தோன்றிய அமாவாசை
திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகைய தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன நாள்? என்று கேட்டார். அம்பிகையின் முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தவர் பவுர்ணமி என்று சொல்லிவிட்டார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் அன்று அமாவாசை. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார். அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும். எனவே இத்தலத்தில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.
மு.கிருஷ்ண மோகன் ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர் 91+8526223399