logo
home பலன்கள் டிசம்பர் 16, 2018
மார்கழி மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)
article image

Color
Share

மேஷம் : அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை நம்பிக்கைகள் நடைபெறும்!ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று எடைபோட்டுவிடும் மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த மார்கழி மாதக்கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தடை பட்டு வந்த வீட்டு கட்டுமானப் பணி கள் இனிதே நடைபெறும். கிரகப்பிரவேசம் மற்றும் கடை திறப்பு விழாக்களை மேற்கொள்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.ராசிநாதன் செவ்வாய் 5ம் வீட்டை பார்ப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கவேண்டும் என்பதால் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூல தெய்வத்தையும் அடையாளம் கண்டு வழிபடச் செல்வீர்கள்.தனாதிபதி சுக்ரன் 7–ல் சஞ்சரிப்பதால் தொழிலைப் பொறுத்தவரை சீராக இருக்கும். சென்ற மாதத்தைக் காட்டிலும் இம்மாதம் சிறப்பாக இருக்கும். வந்த தொகை செலவான உடன், மறுதொகை வந்து மனதை மகிழ்விக்கும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதாரம் பெருக வழிபிறக்கும்.உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் எல்லாம் இனி ஒன்றுசேர முன்வருவர். காரணம் உங்களின் நற்குணத்தையும், நீங்கள் செய்யும் உதவிகளையும் அறிந்து கொண்டு மனம் மாறுவர்.குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் பதிவதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வது மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதிலும் அக்கறை காட்டுவீர்கள். அஷ்டமத்துச் குருவின் ஆதிக்கம் இருப்பதால் எதிர்பாராத விரயங்கள் இடை, இடையே வரலாம். புதன் உங்கள் ராசிக்கு 3, 6–க்கு அதிபதியாவதால் 8ல் வரும் பொழுதெல்லாம் வளர்ச்சி நன்றாக இருக்கும். சிக்கனத்தைக் கையாண்ட நீங்கள் செலவு கூடுதலாகச் செய்ய நேரிடும்.உத்தியோக முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.தனாதிபதி 7ம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும். இரவு–பகலாகப் பாடுபட்டதற்கு ஏற்றபலன் இதுவரை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். உடன் இருப்பவர்களாலும் நற்பலன் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
திட்டமிட்டு செய்த காரியங்களில் வெற்றி காணும் மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு உற்றார், உறவினர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும் மாதமாகும். உடனுக்குடன் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். போதுமான பொருளாதார வசதி வந்து சேரும். இந்த நேரத்தில் வீட்டைப் பழுது பார்க்கும் முயற்சியிலும் அல்லது விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையும். நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.
பரிகாரம்: பழனி ஆண்டவரையும்,திருசெந்தூர் செந்தில் வேலவனையும் வணங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.
--------------------------


ரிஷபம் : கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை ஆதாயம் அதிகரிக்கும்!
மற்றவர்கள் மனம் நோகாத வண்ணம் பேசும் ரிஷப ராசி நேயர்களே!மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் சுக்கிரன் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் அது அவ்வளவு நல்லது அல்ல.குருபகவான் 1,3,11 இடத்தை பார்வையாகப் பார்க்கிறார். அப்புறமென்ன கவலை? அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. மனதளவில் எதைச் செய்ய நினைத்தீர்களோ, அதை மறுகணமே செய்து முடிப்பீர்கள். குணத்தில் சிறந்த நண்பர்கள், உங்களுடன் இருந்து நன்மைகளைச் செய்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த பணத்தை வாங்க முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்பட்டவர்கள், அதிலிருந்து இப்பொழுது விடுபடப் போகின்றீர்கள்.கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றலை நீங்கள் பெற்றிருந்தாலும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவையும் அதிகம் பெற்றிருப்பீர்கள். இந்த மாதத்தில் உங்கள் உத்தியோக ஸ்தானம் வலுவாக இருப்பதால், எதிரிகளின் அனுகூலத்தோடு உயர் பதவி களையும் பெறப்போகின்றீர்கள். சலுகைகள் எதிர்பார்த்த படி கிடைக்கும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.என்ன இருந்தாலும் 8_ ம்ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ஆகையால் ஆரோக்கியத் தொல்லைகளைச் சரிசெய்து கொள்ள, மருத்துவ ஆலோசனைகளைப் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.அந்த அடிப்படையில் கருநிறக் காகமேறி, காசினி தன்னைக் காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே என்று தொடங்கும் சனி கவசப் பாடலை, சனியின் சன்னிதியில் பாடி நெய்தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட்டு வந்தால் பணிகளில் உள்ள தொய்வு அகலும். பழகும் நண்பர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் வந்து சேரும். அதுமட்டுமல்லாமல் இறைவன் படியளக்கும் திருநாளான மார்கழி அஷ்டமியில் சிவாலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பான வாழ்வமையும்.விருச்சிக புதனின் சஞ்சாரம்! விருச்சிக ராசிக்கு புதன் அடியெடுத்து வைக்கும்நேரம், வெற்றிச் செய்திகள் உங்களுக்கு வீடு வந்து சேரும்..2, 5–க்கு அதிபதியான புதன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரம் இது. எனவே பண மழையிலும், பாராட்டு மழையிலும் நனையப் போகிறீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வீட்டுப் பராமரிப்பிலும் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
மனக்குறை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். இனத்தார் பகை மாறும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். தாய்வழி ஆதரவு தனவரவோடு கூடியதாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கணவர் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வார். பிள்ளைகளால் உங்களுக்கு உதிரி வருமானம் கிடைக் கும். அவர்களின் கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முடியக்கூடிய சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் மட்டுமல்ல, ஊதிய உயர்வும் கிடைக்கும். தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் கூடும். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
பரிகாரம் :தினமும் அதிகாலையில் சூர்ய நமஸ்காரம் செய்யவும்.வெள்ளி கிழமை அன்று மஹாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் எல்லா வழிகழிலும் ஏற்றம் கிடைக்கும்.
--------------------------


மிதுனம் : மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை விரோதங்கள் விலகும்!
தவறை ஒப்புக்கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே!மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் தனாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கின்றார்.ராசிநாதன் புதனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் சஞ்சரிகின்றார்.எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். உங்களை விட்டு விலகிச் சென்ற உற்றார், உறவினர்கள், ஓடிவந்து உறவாடுவர். புதிய பாதை புலப்படும். வியாபாரத்திலிருந்த தொய்வுநிலை மாறும். பங்குதாரர் கள் மூலதனம் போட்டு பணம் பெருக வழிவகுத்துக் கொடுப்பர்.அரசு வழியில் கடனுதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கும், வள்ளல்களின் ஆதரவைப் பெறுவதற்கு திட்டமிட்டவர்களுக்கும் அது நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பஞ்சம விரயாதிபதியான சுக்ரன் 5–ல் இருப்பது யோகம்தான். குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகள் இனி ஒவ்வொன்றாக நடைபெறும்.தாமதங்களை அகற்றுவது குருவின் பார்வை பலம் தரும்.குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவானை வழிபட்டு வருவது நல்லது. குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களான ஆலங்குடி, பட்டமங்கலம், குருவித்துறை போன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவதும் நல்லது.திடீர் திருப்பங்களை தித்திக்கும் விதத்தில் தருவது தெய்வ வழிபாடுகள் தான். எனவே ஆன்மிகப் பற்றை அதிகம் வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.எனவே பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் அல்லது புதிதாக வாங்கிப் போட்ட சொத்துகளில் பிரச்சினைகள் உருவாகலாம். அவற்றைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு ஏற்படும். இம்மாதம் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.விருச்சிக புதனின் சஞ்சாரம்!உங்கள் ராசிநாதன் புதன் சஞ்சரிக்கப் போகிறார்.உங்களுக்கு யோகத்தை அதிகம் வழங்கும் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகும். நினைத்த காரியம் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. பதவி உயர்வோடு இடமாற்றங்கள் வந்து சேரலாம்.வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற பெற்றோரின் ஒத்துழைப்பு கிட்டும். வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டுபவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும்.இம்மாதம் புதன்கிழமை தோறும் மாருதி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதம் இது. வளர்ச்சி எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் இல்லத்தில் வந்துசேரப் போகிறது. உங்கள் பெயரில் அசையா சொத்துகளை வாங்க அடிபோடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட வாக்குவாதங்கள் மாறும். வாரிசுகளால் பெருமை உண்டு. அரசியலில் பிரவேசிக்க ஆசைப்படுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். புகுந்த வீட்டில் உங்கள் புகழ் பரவி தனி முத்திரை பதிப்பீர்கள். நடராஜர் தரிசனத்தன்று நடராஜப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். மார்கழி அஷ்டமியில் சிவனை வழிபடுவது செல்வாக்கை உயர்த்தும்.
பரிகாரம் : பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
--------------------------


கடகம் : புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிந்தித்து செய்தால் ஜெயமுண்டு!
பிறர் நலனில் அக்கறை செலுத்தும் கடக ராசி நேயர்களே! உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரைத்ரோகாதிபதியும்,பாக்கியாதிபதியும் குரு பார்க்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்தாலும் உடனுக்குடன் செலவாகிவிடும். கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். 8–ல் செவ்வாய் இருப்பதும் அவ்வளவு நல்லதல்ல. எதிர்பாராத திடீர் விரயங்களைச் சந்திக்க நேரிடும். சுக்ரன் உங்கள் ராசிக்கு 4-ல் இருப்பதால் பெண் வழிப் பிரச்சினைகள் உருவாகமால் இருக்கும். தாயின் உதவி கிடைக்கும்.அலுவலகப் பணிகளில் அவசரம் காட்ட வேண்டாம். அலட்சியமும் காட்ட வேண் டாம். உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை நீங்களே நேரடியாகச் செய்வது நல்லது. வாகனப் பழுதுச் செலவுகள் அதிகரிக்கின்றதே என்று கவலைப்படுவீர்கள்.ராகு 1–ம் இடத்தில் இருப்பதால் பால்ய நண்பர்களின் சந்திப்பால் பண வரவு ஏற்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவதுடன், உங்களின் செயலுக்கு உறுதுணையாகவும் இருப்பார்கள். ஆரோக்கியத் தொல்லை அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பயணங்களாலும், அதிக அலைச்சல்களாலும் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படலாம். எனவே கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது. அஷ்டமத்துச் செவ்வாய்க்குப் பரிகாரமாக அங்காரக தோஷ நிவர்த்தி ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது. அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. இதுபோன்ற காலங்களில் இறைவனின் தரிசனம் பார்ப்பது நல்லது. இன்னல்களில் இருந்து விடுபட வைக்கும்.புதன் 5–ல் சஞ்சரிக்கும் பொழுது, முக்கியப் புள்ளிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். முக ஸ்துதிக்காக பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தக்க தருணத்தில் சிலரது ஒத்துழைப்பு கிடைக்கும். சில உபத்திரவங்களும் வந்து சேரலாம். விரயாதிபதி 5–ல் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் உண்டு. வாரிசுகளை உங்கள் மேற்பார்வை யிலேயே வைத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பீர்கள். தொழிலில் பங்குதாரர்களை மாற்றும் எண்ணம் மேலோங்கும்.நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டில் இருந்து வியக்கும் செய்திகள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே ஏதேனும் உத்தியோக முயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தால், அதில் அனுகூலங்கள் கிடைக்கும்.இம்மாதம் செவ்வாய் தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மாதம் இது. கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மனக்கசப்பை மாற்றிக் கொள்ளலாம். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பர். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஊர் மாற்றங்கள் உருவாகலாம். நடராஜப் பெருமான் வழிபாடு நன்மையை வழங்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
--------------------------


சிம்மம் : மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை முயற்சிகளில் வெற்றி கிட்டும்!
சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்ளும் சிம்ம ராசி நேயர்களே! உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்ம ராசிக்கு 12- ராகுவும், 6–ல் கேதுவும் சஞ்சரிக் கிறார்கள்.4-ல் புதனும் ,குருவும் ,5-ல் சனியும் ,சூரியனும் இணைந்திருக்கிறார். யோகாதிபதி செவ்வாய் 7-ம் ஸ்தானத்தில் இருப்பதால், இந்த மாதத்தை யோகமான மாதமென்றே சொல்லலாம். தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இதுவரை இருந்த இடையூறுகள் அகலும்.விரயாதிபதி சந்திரன் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.வேலைக்காக வெளிநாடுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு அனுகூலமான தகவல் வந்து சேரும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், உங்கள் ராசிக்கு 8,10,12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். இதன் விளைவாக எதிரிகள் விலகுவார்கள். இலாகா மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும். வீடு, வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவு உருவாகும். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதை முன்னிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
‘அர்த்தாஷ்டமச் குருவின் ஆதிக்கம் இருக்கிறதே’ என்று நீங்கள் நினைக்கலாம். இதுவரை உங்களுக்கு மனக் கஷ்டத்தையும், பணக்கஷ்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான், இனி நன்மைகளைச் செய்யப் போகிறார். வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவானை வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை அன்று அதிகாலையில் அரச மர விநாயகரையும், வன்னி மர ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தால், சுபவிரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.ராகு–கேதுக்களின் ஆதிக்கம் லாபமாக இருப்பதால், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வதோடு, மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமிக்கு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்வது சிறப்பு தரும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்.புதிய திருப்பங்கள் பலவற்றை சந்திப்பீர்கள். நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.விருச்சிக ராசிக்கு புதன் இருக்கிறார். நான்காமிடத்தில் சஞ்சரிப்பது நன்மைதான். 2,11–க்கு அதிபதி 4–ல் வரும்பொழுது குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். இதுவரை ஸ்தம்பித்து நின்ற தொழில் தானாக நடைபெறும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.உங்கள் ராசிக்கு 3,10–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 3-ம் ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். வசதிகள் பெருகும். வாய்ப்புகள் வந்து சேரும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி எல்லாம் கிடைக்கும். ஒரு சிலருக்கு, பழைய தொழிலை மாற்றி, புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலத்தோடு இடமாற்றங்கள் எளிதில் வந்து சேரும்.அஞ்சல் வழியிலும் அனுகூலங்கள் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.இந்த மாதம் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டு வருவதன் மூலம் தடைகள் அகலும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காரியத் தடைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சுபச் செலவு உண்டு. குடும்ப ஒற்றுமை கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம், குழப்பங்களில் இருந்து விடுபட இயலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி ஆதரவோடு பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். நடராஜர் வழிபாடு நலம் சேர்க்கும்.
பரிகாரம்: தினமும் காலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும். ஸ்ரீமகாகணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
--------------------------


கன்னி : உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை உத்தியோக அனுகூலம் கிட்டும்!
எண்ணிய காரியம் ஈடேறும் வரை முயற்சிக்கும் கன்னி ராசி நேயர்களே! உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் புதன் 3-ல் சஞ்சரிக்கிறார். இதனால் வரும் மாற்றங்களால் நல்ல ஏற்றங்கள் கிடைக்கும் என்றே சொல்லலாம். உங்கள் ராசிநாதனாகவும், 10–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், 3-ல்இருக்கும் பொழுது தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற, புதிய நண்பர்கள் உங்களோடு வந்திணைவர். இதனால் பொருளாதார நிலை உயர வழி உண்டாகும்.சேமிக்க வேண்டுமென்ற ஆசை உருவாகும் நேரம் இது. புதியதாகத் தொடங்கிய தொழில் மூலமும் லாபம் வந்து சேரலாம். குருவின் பூரண அருள் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ராசிக்கு 3-ல் குரு பகவான் சஞ்சரித்து வருகிறார். குருவின் பார்வைகள் மூலம் 7,9,11, ஸ்தானத்தை பார்த்து கொண்டு இருப்பதால் நன்மையே கிடைக்கும்.தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். நிலைமை உயர்ந்து நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லம் தேடிவந்த வரன்கள் எல்லாம், இரண்டாண்டுகளாகத் திரும்பி, திரும்பிச் செல்கின்றதே என்ற கவலை இனி அகலும்.அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். திடீ ரெனப் பொறுப்புகள் வந்து மகிழ்ச்சியை வழங்கலாம். ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. அங்ஙனம் வாங்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, பூமிகாரகன் செவ்வாய் யாருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கிறாரோ அவருடைய பெயரில் வாங்குவது நல்லது. விலகிச் சென்ற சொந்தங்களில் ஒருசிலர் உங்களோடு வந்திணைவர். வியாழன் தோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம், எந்த நாளையும் இனிய நாளாக அமைத்துக் கொள்ள இயலும்.ராசிநாதன் புதன் 3–ல் சஞ்சரிக்கும் பொழுது, வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இழப்புகளை ஈடுசெய்ய முன்வருவீர்கள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். மங்களத் தகவல் வீடு தேடிவரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு 2,9–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 2–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, வாங்கிய கடனைக் கொடுக்க வாய்ப்புகள் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. முக்கியப் பிரமுகர்கள் இல்லம் தேடிவந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைப் போக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தங்கம், வெள்ளி வாங்கி மகிழும் நேரமிது.ராசிக்கு, 3-ல்புதன் இருக்கிறார். இந்த காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். செய்யும் காரியங்களை கவனித்துச் செய்தால், சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இடம், பூமி விற்பனையில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள், மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். இம்மாதம் புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாருங்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
உங்களை முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கவிருக்கும் மாதம் இது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர்மாற்றம், இடமாற்றம் மட்டுமல்ல, நாடுமாற்றங்கள் கூட ஒருசிலருக்கு வந்து சேரலாம். சென்ற மாதத்தில் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்போடு உன்னதமான காரியமொன்று இல்லத்தில் நடைபெறப் போகிறது. விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் பெருகும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரமிது. ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
பரிகாரம் : புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.