logo
home ஆன்மீகம் ஜூலை 12, 2016
பாவத்தை சேர்க்கும் வி.ஐ.பி., மற்றும் சிறப்பு தரிசனம், புண்ணியம் வேண்டி கோவிலுக்கு சென்று பாவத்துடன் திரும்பும் அவலம்
article image

நிறம்

தற்போது இந்துக் கோவில்களும், இந்துமதமும்,அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும்  பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக மாறிவருகிறது. மக்கள் மனதில் உள்ள சுமையையும், வேதனையையும் போக்கும் கோவில்களில், தற்போது சுவாமி சிலைகளை வெறும் காட்சிப் பொருளாக மாற்றி வைத்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் கோவில்கள் உருவாக்கப் பட்டதன் நோக்கமே அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
எவ்வளவு மனக் கஷ்டம் இருந்தாலும், கோவிலுக்கு சென்று அழகிய குளக்கரையில் கால் கழுவி, குளக்கரையில் சிறிது நேரம் அமர்ந்து குளத்தை ரசித்துவிட்டு மனபாரத்தில் சிறிதளவு இறக்கிவைத்து விட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமியை மனதார வணங்கியபின் கோவிலில் அமர்ந்து இயற்கை காற்றையும் அமைதியான சூழ்நிலையையும் அனுபவித்த பின், மீதி இருந்த மனபாரமும் குறைந்து, மனம் புத்துணர்ச்சி பெற்று மிகுந்த தெளிவு தோன்றும் வகையில் அமைந்த கோவில்களின் இன்றைய நிலை....
குளம் இருந்தால் தண்ணீர் இருக்காது, அப்படியே தண்ணீர் இருந்தாலும் பாதுகாப்பு என்ற பெயரில் குளத்தை சுற்றி சுற்றுச் சுவரை கட்டி அதற்கு ஒரு இரும்பு கேட் வைத்து பூட்டு போட்டு பூட்டிவைத்துவிட்டனர் (அந்தக் காலத்தில் குளத்தை சுற்றி எந்த வேலியும் போடவில்லை ஆனாலும் பாதுகாப்புடன்தான் இருந்தது).
கோவிலுக்கு போனால் இயற்கைக்கு மாறாக கோவில் முழுவதும் டைல்ஸ் போட்டும், வலம் வரும் பாதையை சுற்றி வானமே தெரியாத அளவிற்கு தடுப்பு போட்டு இயற்கை காற்று சற்றும் கோவிலுக்குள் நுழையாத வண்ணம் கோவிலையே ஒரு கூண்டு போல் மூடிவைத்துவிட்டு, திருவிழா சமயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் போது மூச்சுக்காற்றுக்கூட விஷக்காற்றாக மாறும் அளவுக்கு, திறந்த வெளியே இல்லாமல், கோயில் நுழைவு வாயில் முதற்கொண்டு கர்ப்ப கிரகம் வரை தகரம் போன்றவற்றால் மூடப்பட்டு கோவிலையே கூண்டாக மாற்றி வைத்துவிட்டனர். அனைவரையும் பாதுகாக்கும் கடவுளையே சிறைக்குள் அடைத்து காட்சிப் பொருளாக மாற்றிவைத்துள்ளனர்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் சுவாமியை விரைவாகவும், அருகிலும் தரிசிக்க 100 ரூபாய் முதற்கொண்டு பல ஆயிரம் ரூபாய் வரையில் சிறப்பு தரிசன டோக்கன் விற்பனையையும் துவக்கி வைத்து, ‘பணம் இருப்பவர்களுக்குத்தான் சுவாமி தரிசனம் கிடைக்கும்’ என்ற நிலையை உருவாக்கி வைத்துவிட்டனர். இன்னும் ஒருபடி மேலாக சொன்னால் அர்ச்சனை தட்டில் 100 ரூபாய் போட்டால் சுவாமி கழுத்தில் இருக்கும் மாலையை பிடுங்கி, அர்ச்சனை தட்டில் 100 ரூபாய் போடுபவரின் கழுத்திலும் போடுகின்றனர். ஆக மொத்தம் கடவுளை வைத்து பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகவே கோவில் தற்போது மாறி விட்டது.
மனிதர்களை ஒரு காலத்தில் ஜாதியால் பிரித்து வைத்திருந்த நிலை மாறி, தற்போது பணத்தால் பிரித்துவைத்துள்ளது நமது சமூகம், முற்காலத்தில் உயர் ஜாதியினருக்கு மட்டும் மரியாதை செய்யப்பட்ட நிலை மாறி தற்போது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மரியாதை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாவம் எப்படி வந்து சேரும்?
‘‘பணக்கஷ்டமா இருக்குன்னு கோவிலுக்கு போனேன் அங்க சிறப்பு தரிசனம் ரூ.100ன்னு சொன்னாங்க நம்மளவிட சாமி பண கஷ்டத்துல இருக்கிறார்ன்னு திரும்பி வந்துட்டேன்” 
இப்படி பலபேரால் கேலி செய்யும் நிலைக்கு கடவுள் தள்ளப்பட்டதற்கு காரணம் யார்? இந்த கேலியால் விளையும் பாவம் யாரைச் சென்றடையும்.
உண்மையில் இறைவன் ஜாதியையும், வசதி வாய்ப்பையும் பார்த்து அருள் செய்வதில்லை, உண்மை பக்தியையும், அன்பை மட்டுமே இறைவன் ஏற்பான் என்பதற்கு பல்வேறு புராண கதைகள் உண்டு. ஜாதியால் பிற்பட்ட நந்தனாரை கோவிலுக்குள் அனுமதிக்காதபோது, கோவிலுக்கு வெளியே நின்றிருந்த நந்தனாருக்கு தரிசனம் தர நந்தியை விலகி நிற்குமாறு சிவபெருமான் உத்தரவிட்டு, நந்தனாரை ஆட்கொண்ட வரலாறும், வசதி படைத்த அரசன் கட்டிய கோவிலை ஏற்காமல் ஏழையான தனது பக்தன் மனதால் கட்டிய கோவிலுக்கு முன்னுரிமை தந்த சிவபெருமானின் லீலைகள் நிறைந்தது இந்து மதம். 
குணத்தால் உயர்ந்தும், பக்தியால் உயர்ந்தும், வசதி வாய்ப்பில் பின்தங்கி இருந்தாலும் உண்மை பக்தனாக இருப்பவர்கள் சுவாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் சமயத்தில், பணத்தால் மட்டும் உயர்ந்தவர்களுக்கு,  முன்னுரிமை தரப்படும்போது, உண்மையான பக்தர்கள் மனதளவில் கோபப்பட்டாலும், மனவருத்தம் அடைந்தாலும், அந்தப் பாவம் சுவாமி தரிசனத்திற்கு முன்னுரிமை தந்தவரையும், பெற்றவரையுமே சாரும்.
நமது கோவில் சாஸ்திரங்கள் படி, எந்த ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும் எந்த வகையிலும் இறைவனைவிட முக்கியத்துவம் தரக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. போர்க்காலங்களில், இறைவனை வணங்கிவிட்டு போரிட செல்லும் மன்னன் மட்டும் இறைவன்  தனிப்பட்ட முறையில்  பூஜிக்க சாஸ்திரம் வகுக்கப்பட்டிருந்தது. போரில் ஒரு சில மனித்துளிகூட வீணாகக் கூடாது என்பதால் மன்னன் இறைவனின் ஆசி பெற முக்கியத்துவம் தரப்பட்டது. மற்றபடி இறைவனை பொது மக்களுடன் மக்களாக மட்டுமே வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் உண்டு.
ஆனால் இன்றையநிலையில், சாஸ்திரங்கள் மறைக்கப்பட்டு, வசதி, வாய்ப்பு, பணம் போன்றவை முன்னின்று, உண்மையான பக்தர்களுக்கு மனஉளைச்சலையும், இடையூறுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது. உண்மையான பக்தர்களின் சாபத்தையும், வயிற்றெரிச்சலையும் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் சொகுசாக அனுபவிப்பர்கள்  பெற்றுச் செல்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பல மணிநேரம் கால்கடுக்க நிற்கும் உண்மை பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு காரணமாகாமல், அவர்களின் சாபங்களையும் பெறாமல் நாம் தவிர்க்க வேண்டுமென்றால், சிறப்பு தரிசனத்தில் செல்லாமல் பொது மக்களுடன் இறைவனை வழிபடுவது ஒன்றுதான் தீர்வு.
அதுவும் முடியவில்லையென்றால் வெளியில் நின்று மனதார இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு, இயலாதவர்களுக்கு அவர்களின் தேவையான உணவுப்பொருள் போன்றவற்றை வாங்கி கொடுத்துவிட்டு மனதார இறைவனை வணங்கினாலேயே இறைவனின் அருளுக்கு நாம் பாத்திரமாகலாம். சிறப்பு தரிசனம், வி.ஐ.பி.தரிசனம் போன்றவற்றில்  சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். பாவத்தை சுமக்க நாம் கோவிலுக்கு செல்ல வேண்டாம், கோவிலுக்கு சென்று புண்ணியத்துடன் வருவோம்.
ச.நாகராஜன், ஆசிரியர் ஆன்மிக மலர்.காம் போன் - 7299992699 குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com