logo
home ஆன்மீகம் செப்டம்பர் 02, 2016
கர்மயோக சாஸ்திரத்தின் விளக்கமும், அவற்றின் வகைகளும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும்
article image

நிறம்

ஊழ்வினையை அடிப்படையாகக்கொண்டு இவ்வுலகில் பிறந்த மானிடர்கள் ஒழுக்க நெறிகொண்ட புண்ணியத்தை பெருக்குகின்ற கடமைகளைச் செய்வதன் மூலம் உயர்வு பெறலாம் என்னும் நெறியை உணர்த்துவதே கர்ம யோக சாஸ்திரமாகும்.
“கர்ம யோகம்” மட்டும் ஒரு ஆன்மாவின் வினை வலிமையை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்யக்கூடியதாகும்.
உடல்நிலையை வலிமைப்படுத்தி அதன் மூலம் சுவாச நிலையைக் கட்டுப்படுத்தி மூன்றாம் கண்ணாக விளங்கும் நெற்றிக்கண்ணைத் திறந்து உயர்வு பெறத்தக்க மார்க்கம் வாசி யோகம் என்பதாகும். ஆனால், வாசி யோகத்தை திறம்படப்பயின்று அதனை செயலாக்கம் செய்து வெற்றி காண்பது மிகவும் கடினமான செயலாகையால் கர்மயோக வழியில் கடமைகளின் மூலமே ஞானக்கண்ணைத் திறக்க வழிவகை செய்யும் மார்க்கமே கர்ம யோகமாகும்.
கலியுகத்தில் பலதரப்பட்ட மக்களால் மதம், மொழி போன்ற எந்தவித வித்தியாசங்களுக்கும் கட்டுப்படாமல்; அதிக சிரமங்கள் இல்லாமல் எளிமையாகப் பின்பற்றி உயர்வடையும் மார்க்கங்களை கர்ம யோக சாஸ்திரம் கூறுகின்றது. சித்தர்கள் பின்பற்றி தீவினைகளை நீக்கி நல்வினைகளைப் பெற்று நினைத்ததெல்லாம் பெற்ற சிறப்புடைய அபூர்வ யோக முறை ”சித்தர் கர்ம யோகமாகும்”.
கர்ம யோகம்
கர்ம யோகமானது செய்தல், செய்வித்தல் என்னும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன: 
1. தன்பால் கர்ம யோகம்
2. பிறபால் கர்ம யோகம்
தன்பால் கர்ம யோகம்:
தன்பால் கர்ம யோகமானது தனக்கும் தன்னைச்சார்ந்த ரத்தத்தொடர்புடைய உறவினர்களுக்கும் கடமையாற்றுவதாகும். தன்னை உயர்த்திக்கொள்ள முதலில் தன்னுடைய ஓழுக்கத்தை வளர்த்துக்கொண்டு, தர்மநெறிகளுக்குட்பட்டு தான் வாழவேண்டும். தன்னைச்சார்ந்த தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, மனைவி, குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தோர் போன்றவர்களை நல்வழிப்படுத்தி, தர்மத்திற்குட்பட்டு அவரவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளைக்குறைவில்லாமல் செய்து அவர்களையும் தர்மக்கடன்களார்க்கச்செய்து அவர்களின் வாழ்விலும் உயர்வான நல்வினைகளைச்சம்பாதிக்கச்செய்து உயர்வான வாழ்வை அடையச்செய்வதாகும்
பிறபால் கர்ம யோகம்:
பிறபால் கர்ம யோகமானது உறவல்லாத பிற ஆன்மாக்களுக்கு கடமையாற்றுவதாகும். தான் ஒழுக்கத்தில் சிறந்து ஓங்கி தர்ம நெறிக்குட்பட்ட வாழ்க்கை நடத்துவதைப்போன்று தம்மால் முடிந்தவரை அவற்றை நம்மோடு நட்பு கொண்டவர்களுக்கும் உபதேசித்து அவரவர் கடமைகளை முறையாகச்செய்வித்து அவரவர்களின் வாழ்விலும் உயர்வான நல்வினைகளை சம்பாதிக்கச்செய்து உயர்வாழ்வை அடையச்செய்வதாகும்.
கர்ம யோகத்தின் மூன்று படிகள்:…
கர்ம யோகத்தின் முதல்படி மனதை ஒருமுகப்படுத்துவதாகும். மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம் எனப்படும். அலைபாயும் மனதைக்கட்டுப்படுத்தி மனதில் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள தியானம் உதவும். மனத்தெளிவு பெற்ற பின் மனம் என்னும் கழனியில் முதல் வித்தாக பக்தி என்னும் வித்தை விதைக்க வேண்டும். பக்தியின் வித்தாக தாம் விரும்பும் ஏதாவதொரு தெய்வத்தை குருவாக ஏற்று வழிபாடு செய்து கொண்டு வரவேண்டும்.
கர்ம யோகத்தின் இரண்டாம் படி மனிதநேயமாகும். குருவருள் துணைக்கொண்டு தன்னைப்போன்று இறைவனால் படைக்கப்பட்ட பிற உயிர்களின் உயர்வுகளையும் தாழ்வுகளையும் எண்ணிப்பார்த்தல்; தர்மத்தின் ரூபமாகிய பிற உயிர்களிடத்து இருக்கின்ற உயர்வுகளை மனதில் பதிந்து கொள்ளுதல்; தன் கடமைகளை கர்ம யோகம் மூலம் எவ்வாறு பிறரிடம் செயலாற்றுவது என்பதை அறிந்து தெளிந்து செயலாற்றுதல் போன்றவைகள் கர்ம யோகத்தின் இரண்டாம் படியாகும்.
ஒரு மனிதன் கர்ம யோகத்தைப்பின்பற்றி வாழ்க்கையை நடத்தும் பொழுது ஊழ்வினையானது வாழ்க்கையில் பல சோதனைகளை ஏற்படுத்தி அவனை கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் பொழுது, குருவருள் துணைக்கொண்டு கர்ம யோகத்தை குறையில்லாமல் செய்ய மனிதனாகப்பிறந்து உயர்வான கடமைகளையாற்றிக்கொண்டு தர்ம சொரூபம் கொண்ட உயர்வான ஆற்றலை சேமித்து வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களை நேரில் கண்டு அவர்களின் ஆசீர்வாதங்களை அடிக்கடி பெற்றுக்கொண்டு வந்தால் ஊழ்வினையின் வீரியம் குறைந்து கர்ம யோகம் முழுமை பெற்று அதன் முழுபலனைக்கொடுத்து உயர்வு ஏற்படுத்தும். குருமார்களின் நேரடி ஆசீர்வாதங்களைப்பெறும் பொழுது அவர்கள் சேமித்து வைத்துள்ள நல்லூழ் ஆற்றலின் ஒரு பகுதியானது ஆசீர்வாதம் பெற்றுக்கொள்பவரின் ஆன்மாவிற்குப்பகிர்ந்தளிக்கப்படுவதால் ஊழ்வினையிலுள்ள தீவினைகள் குறைக்கப்பட்டு கர்ம யோகத்தின் முழுபலனை ஒரு மானிடன் அடைய இறையருள் கூட்டுவிக்கின்றது. எனவே, கர்ம யோகத்தின் மூன்றாம் படி மிக முக்கியமான படியாகும்.

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com