logo
home ஆன்மீகம் டிசம்பர் 17, 2017
மனிதர்களும் தேவர்களும் ஒன்றாக இணைந்து வழிபடும் மார்கழி மாதம்
article image

நிறம்

ஜோதிடவியலில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் தனுசுராசியில் சஞ்சரிப்பது மார்கழி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரம் என கருதப்படுகிறது. மார்கழி 1ம் தேதி தனுர் மாத பூஜை ஆரம்பம். திருமணமாகாத பெண்கள் இன்று முதல் இம்மாதம் முழுவதும் தினசரி பெருமாள் கோயிலுக்கு சென்று தினமும் ஒரு பாசுரம் வீதமாக திருப்பாவை படித்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப் பொறுத்தவரை இரவுப் பொழுது - நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம். இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். மனிதர்களாகிய நாமும் தேவர்களுடன் சேர்ந்து பூஜை, வழிபாடு போன்றவற்றை செய்வதால் அந்த மாதத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிகமான சக்தி உள்ளதாக கூறுகிறது சாஸ்திரங்கள். ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய சிறந்த மாதம் மார்கழி ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ என்று வடமொழியிலும் ‘மார்கழி’ என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப் பிதாமகராகத் திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள், விவரம் அறிந்தவர்கள். பக்திக்கு முக்கியத்துவம் தரும் மாதம் அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின் காரணமாகத்தான் அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது. அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ் சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்.மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண் டாடுகிறோம். இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை சேவிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது சாஸ்திர நம்பிக்கையாகும். மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். சுபநிகழ்வு நடக்காததன் காரணம் நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பீடு உடைய மாதமாகிய இதனை பொருள் மாற்றி பலர் திரித்து இந்த புனிதமான மாதத்தினை பீடை மாதமாக மாற்றிவிட்டனர். தேவர்களுடன், மக்களும் இறை சிந்தனையில் ஈடுபடும்போது சுபநிகழ்சி என்னும் மகிழ்ச்சியால் பக்திக்கு இடர் ஏற்படக் கூடாது என்ற பெரியோரிகளின் உயர்ந்த நோக்கமே மார்கழியில் எந்த சுபநிகழ்ச்சிகளும் நடைபெறாததற்கு உண்மையான காரணமாகும். இனியாவது இந்த மார்கழியின் சிறப்பிற்கேற்ப நாமும் அதிகாலையில் எழுந்து தேவர்களுடன் சேர்ந்து பூஜை, அபிஷேகம் போன்றவற்றை செய்து தேவர்களைப் போன்று சிறப்படைவோம்.