logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 11, 2018
ஆடி அமாவாசையும் அப்பர் கைலாயம் செல்லும் விழாவும்
article image

நிறம்

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம். ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் ,பவானி , போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர். ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு - கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குள வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.