logo
home ஆன்மீகம் பிப்ரவரி 01, 2019
அனைத்து பாவத்தையும், பிரச்சனைகளையும் தீர்க்கும் சனி பிரதோஷ உபவாசம்
article image

நிறம்

ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம் ,பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார். அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள் ,காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல்,மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும். சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் பிரதோஷத்தின் வகைகளை ஐந்து விதமாக பிரித்து வைத்துள்ளனர், நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாச பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என்று ஐந்து வகையாக பிரதோஷத்தைப் பிரித்துள்ளனர். பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத் தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷகாலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப்பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.