logo
home தத்துவம் மார்ச் 24, 2019
கிடைத்ததை திருப்தியுடன் ஏற்றால் சந்தோஷத்திற்கு குறைவில்லை
article image

நிறம்

செல்வத்திற்கு பெயர் பெற்ற நாடு அது. நெற்களஞ்சியம் முதல் அரசின் கருவூலம் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. இருப்பினும் அரசனுக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒன்று தம்மிடம் இருந்து தவறுவதாக தோன்றியது அவனுக்கு. இந்த உறுத்தலுடனேயே ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் கிளம்பினான். அப்படி செல்லும்போது ஏதோ வேலை செய்துவிட்டு கூலி பெற்றுக்கொண்டு ஆனந்தமாக வந்துகொண்டிருந்த ஒரு குடியானவனை பார்த்தான். “உன்னை பார்த்தால் மிகவும் திருப்தியுடன் வாழ்பவன் போல தெரிகிறது. உன் வருமானம் என்ன, என்ன வேலை செய்கிறாய்?” என்று விசாரித்தான் அரசன். “ஐயா… நான் ஒரு தச்சுக் கூடத்தில் வேலை செய்கிறேன். தினசரி எனக்கு எட்டணா வருமானம்” என்றான். “எட்டணா வருமானமா? அது உனக்கு எப்படி போதும்?” “எனக்கு அது போதுமய்யா… இரண்டணாவுல சாப்பிடுகிறேன். இரண்டணாவுல பழைய கடனை அடைக்கிறேன். இரண்டணாவுல தருமம் பண்றேன். இரண்டணாவை சேமிக்கவும் செய்றேன்!” என்றான். அரசனுக்கு ஒரே வியப்பு. நமக்கு எவ்வளவு வருமானம் குவிந்தாலும் நிறைவு ஏற்படவில்லை. இவன் என்னடாவென்றால், எட்டணாவை கொண்டு இவ்வளவு செய்வதாக சொல்கிறானே… இவனுடன் சென்று இவன் சொல்வது உண்மையா என்று பார்ப்போம் என்று அவனுடனே சென்றான். அவன் வீட்டுக்கு சென்றதும், இரண்டணாவை மனைவியிடம் கொடுத்தான். அவள் தானியம் வாங்கி வர, அதை அரைத்து கூழாக்கி அவன் பிள்ளைகள் உட்பட வீட்டில் உள்ள அனைவரும் குடித்தனர். “இரண்டணாவுல கடனை அடைக்கிறேன். இரண்டணாவுல தருமம் பண்றேன். இரண்டணாவை சேமிக்கிறேன் என்று சொன்னாயே….?” என்றான் மன்னன். “இதோ என் தாய் தந்தை. என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். இவர்களுக்கு உணவிடுவதன் மூலம் நான் இவர்களுக்கு பட்ட கடனை திரும்ப செலுத்துகிறேன்!” அடுத்து தனது பிள்ளைகளை காட்டி, “இதோ இவர்களுக்கு உணவிடுவது என் சேமிப்பு போல. இப்போது என் தாய் தந்தையை நான் பார்த்துக்கொள்வது போல நாளை வயதானால் என்னை இவர்கள் அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்கள் அல்லவா? எனவே இது சேமிப்பு!!” “இதோ கணவனை இழந்த என் மூத்த சகோதரி. அவளுக்கும் அவளது பிள்ளைக்கும் உணவிடுவது நான் செய்யும் தர்மம்!” என்றான். அரசனுக்கு யாரோ பின்னந்தலையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. அரசனான நாம் பிச்சைக்காரன் போல திருப்தியின்றி வாழ்கிறோம். இவனோ, இத்தனை ஏழ்மையிலும் மகத்தான தர்மங்கள் செய்து மனநிறைவுடன் வாழ்கிறான். இவன் தான் உண்மையில் அரசன் என்று வியந்தவாறு சென்றான். நாம் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தளவு அதை நியாயமாக செலவழிக்கிறோம் என்பதே முக்கியம். – வாரியார் ஸ்வாமிகள் கூறிய கதை. பி.கு. : தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்தால் போதும் என்று இதை அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது. CHARITY BEGINS AT HOME என்று சொல்வார்கள். எங்கோ இருப்பவர்களுக்கு உதவிகள் செய்வது சுலபம். ஆனால் நம்முடன் நம்மை சார்ந்து இருப்பவர்களிடம் அன்பு செய்வதில் தான் அவர்களுக்கு உதவுவதில் தான் உண்மையான தர்மம் இருக்கிறது. இதை நாம் என்றும் மறக்கக்கூடாது!