logo
home ஆன்மீகம் ஏப்ரல் 27, 2018
இயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...
article image

நிறம்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தாலும், இந்த மாதத்தினை வசந்த காலம் என்கிறோம். பஞ்சாங்கத்திலும் வஸந்த ருது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
ஏன் இந்த முரண்பாடு? என்று யோசித்தால் அற்புதமான விளக்கம் நம் முன்னோர் கூறியுள்ளனர்.
நவக்ரகங்களின் தலைவனான சூரியன் தனது முழு வலிமையுடன், உச்ச பலத்துடன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை மாதம். சூரிய பகவானின் தாக்கம் முழுமையாக நிறைந்திருக்கும் காலம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்குரிய நட்சத்திரங்கள். அதிலும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை அக்னி. (‘அக்னிர்ந பாது க்ருத்திகா:’ என்று வேதம் சொல்லும்) மிகவும் உஷ்ணமான நட்சத்திரம். அந்த கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது வெயில் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதற்கு முந்தைய நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள், பிந்தைய நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் என்ற கணக்கில், அதாவது, பரணி நட்சத்திரத்தின் 3வது பாதம் முதல் தொடர்ந்து கார்த்திகை 4 பாதங்கள், ரோகிணி நட்சத்திரம் 2வது பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் நேரமே ‘அக்னி நட்சத்திரம்’ என்றழைக்கப்படும் கத்திரி வெயில் காலம். வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் சுபவிசேஷங்களை மேற்கொள்வதைத் தவிர்த்தனர் நம் முன்னோர்கள்.
மாசி, பங்குனி மாதங்கள் இலையுதிர் காலம். முக்கால் வாசி மரங்கள், இலைகள் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளிக்கும். சித்திரை மாதத்தில்தான் அந்த மரங்களில் இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக மரங்கள் முழுவதிலும் பசுமை ஆக்கிரமிக்கும். தாவரவியல் ரீதியாகச் சொல்வதென்றல், சூரியனின் துணையோடு மரங்கள் குளோரோஃபில் எனப்படும் பச்சையம் என்ற ஆகாரத் தினை அடைந்து தங்களை முழு வலிமையாக ஆக்கிக் கொள்ளும்.
இயற்கைக்கு சக்தியூட்டும் இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியும் மிகவும் சக்தி வாய்ந்தது, மரம் செடி, கொடிகள் போன்றவைகள் பெறும் பச்சையத்தை இந்தப் பௌர்ணமி நாளில் வரும் வெளிச்சத்தின் உதவியுடன் இயற்கை தன்னை செழுமைப்படுத்திக் கொள்ளும், (அதாவது செல்போனில் சார்ஜ் குறைந்து மீண்டும் ரீ சார்ஜ் செய்வது போன்று) இவ்வாறு மரம், செடி, கொடிகள் தங்களை இயற்கையாக செழுமைப்படுத்தும் இந்த நாளில், இயற்கையுடன் சேர்ந்து மனிதர்களும், தங்களது எண்ண ஓட்டங்கள், மனசாந்தி, உடல் புத்துணர்ச்சி போன்றவைகளைப் பெற வேண்டும் என்பதால்தான் நம் முன்னோர்கள், நிலாச்சோறு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினர்.
இந்த சித்ரா பௌர்ணமி நாளில், முழுநிலவின் ஒளியில் வெட்ட வெளியில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பாருங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும். இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைமுறையில் அந்த ஒரு நாளில் மட்டுமாவது நிலவொளி படுகின்ற இடத்தில், கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை முடியா விட்டால் குறைந்தது மொட்டை மாடியில் அமர்ந்தாவது சாதாரண சாப்பாடு ஆக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுப் பாருங்கள், மனதளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளை சுறுசுறுப்பானால் நமது இயக்கமும் வேகம் பெறும். இயக்கம் வேகம் பெற்றால் லட்சியத்தை எளிதாக அடைய முடியும். இந்த சித்திரா பௌர்ணமி அன்று, இயற்கையான இடத்தில் அமர்ந்து, நிலா வெளிச்சம் நம் மீது படுமாறு குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து உணவு உண்டு, தங்கள் அன்பை பரிமாரிக் கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள், தீய செயல்கள் போன்றவை, நம்மை விட்டு எளிதில் நீங்கும். இதனால்தான் சித்திரா பௌர்ணமியன்று நிலாச்சோறை நமது முன்னோர் படைத்தனர்.
மனித நலத்திற்கு நம் முன்னோர்கள் கூறிய பல விஷங்களை நாம் மறந்து விட்டோம். இனியாவது நம் முன்னோர் சொல்லில் உள்ள நல்லவற்றை மீண்டும் நாம் பெற முயற்சிப்போம்.
சித்ரா பௌர்ணமியன்று குடும்பத்துடன் அமர்ந்து நிலாச்சோறு உண்டு நம் குடும்பத்துடன் இயற்கை சக்தியை பெற்று புதுப்பொலிவு பெறுவோம்.