logo
home ஆன்மீகம் மே 05, 2019
ராமா நீ மிகப்பெரிய படகோட்டி, நான் சிறிய படகோட்டி: கேவத்
article image

நிறம்

ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவி இருந்தது. ராமன் காட்டிற்கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. ''என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான். ''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.'' அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன் படகை இங்கே கொண்டுவா '' என்று கூறி, படகு மெதுவாக அவர்களை நெருங்கி வருகிறது. ''கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன். இவர்களை அக்கரைக்கு கொண்டு சேர்'' என வேண்டுகிறார். கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் உறங்கும் முன்பும் ராம நாமம் சொல்பவன். '' ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது '' என வேண்டுகிறார். ' ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ''- குகன். ''அப்படி இல்லை ஐயா, என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்ய வேண்டும்.'' குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு.கேவத் இதை கவனித்துவிட்டு நேராக ராமனை வணங்கி சொல்கிறான். ''மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை '' ''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' - என கேட்கிறார் ராமர். ''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகை பொன்னுக்கு ஆசைப்பட்டு யாராவது திருடி விட்டால் என் படகு காணாமல் போய் விடுமே!'' அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். கேட்டுக்கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும் '' என வேண்டுகிறார். ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை,பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார ஆசீர்வாதம் செய்து மகிழ்கிறார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை நீரால் ஸ்ரீராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள். கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். பின் அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான். அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராமரின் பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். . கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத். சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார். ''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என கூறி கேவத் பரிசை ஏற்க மறுக்கிறான். ''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன். ''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா '' ''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- என கேட்கிறார் ராமர் ''தொழில் விசுவாசம் ஐயா'' என்றான் கேவத் ''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்'' ''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்க மாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான். ''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர். ''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத்.