logo
home ஆன்மீகம் அக்டோபர் 07, 2018
பெருமாளும் நம்முடன் சேர்ந்து முன்னோருக்கு திதி கொடுக்கும் தலம்
article image

Color
Share

பித்ரு பூஜை என்பது இன்று உலகளாவிய மக்கள் அவசியம் கடைபிடிக்கும் ஒரு முக்கிய சடங்காகும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் உள்ள திருக்கோவில்களிலும் தற்போது திதி கொடுக்கும் சம்பிரதாயத்திற்கு மிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

கலியுகத்தில் இறைவனின் ஆசி மட்டுமின்றி, நமது முன்னோர்களின் ஆசியும் நம் வாழ்க்கைக்கு தேவை என்பதை உணர்ந்த, மக்களால் மிக அவசியமான வழிபாட்டு முறையாக அமாவாசை திதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எந்த தொழில் செய்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், எவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தமும், கசப்புணர்வும் தொடர்ந்து இருந்தால், அவர்களின் பித்ரு தோஷமே அதற்கு காரணமாக இருக்கும்.

ஒருபாட்டில் நீரில் சிறிது குறைந்து இருந்தால் அந்த பாட்டில் நீர் சலசலப்பதைப் போன்று, தெய்வ நம்பிக்கையும், தெய்வ பக்தியும் நம்மிடம் அதிகம் இருந்தாலும், மனதில் ஒரு சிறு சஞ்சலம் இருந்தால் அது கண்டிப்பாக பித்ரு சம்பந்தப்பட்ட வழிபாட்டில் குறைபாடு இருப்பதை குறிக்கும்.

மேற்கண்ட பிரச்சனை தீர தெய்வ நம்பிக்கையுடன், பித்ரு நம்பிக்கையும் சேர்ந்தால் மன சஞ்சலம் நிச்சயம் அகலும், தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் அனுக்கிரகமும் நமக்கு முழுமையாக கிடைத்தால் முழுமையடைந்த மனிதனாக உலக வாழ்க்கையை வாழலாம். எந்தப்பிரச்சனையையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், சக்தியும் நமக்கு கிடைக்கும். இந்த முழு சக்தி நமக்கு கிடைக்கும்போது இந்த பிறவிக்கு தேவையான பலனைப் பெறுவதுடன், மறுமைக்கு தேவையான புண்ணிய காரியங்களில் ஈடுபட நமது மனம் தானாகவே வழியமைத்துக் கொள்ளும்.

இதனால்தான் மிகப்பெரிய மகான்கள், ஞானிகள் போன்றவர்கள் சன்னியாசம் பெற்றாலும் கூடு தங்களது பெற்றோர்களின் இறுதிநாளில் செய்ய வேண்டிய கடமைகளை மிகத் தெளிவாக செய்து முடித்துவிடுவார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பித்ரு சம்பந்தப்பட்ட வழிபாட்டிற்கு நமது இந்தியாவில் பல்வேறு தலங்கள் மிகவும் பிரிசித்திப்பெற்று விளங்குகிறது.

இதில் அனைத்து தலங்களுக்கும் அனைவராலும் சென்று வழிபட முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உள்ளுர்களில் இருக்கும் ஒருசில சிறிய தலத்தில் வீற்றிருக்கும் மூர்த்தங்களே குறிப்பிட்ட தலத்தின் சக்தியைப் பெற்று விளங்கும் வகையில் நமது முன்னோர்கள் அமைத்திருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களில் முன்னோருக்குரிய பூஜைகள் செய்யப்பட்டாலும் ஒரு சில கோயில்கள் பித்ரு பூஜைக்கென்று தனிச்சிறப்பு பெற்றவையாகவும் விளங்குகின்றன. ஆனால் பித்ரு பூஜை மட்டுமே நடைபெறும் வகையில் எந்த ஒரு தனிப்பட்ட கோவில்களும் இந்தியாவில் கிடையாது என்று நாம் நினைப்பது தவறு.

செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங் காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது.

மேலும் இச் சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி “ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர்” என்னும் திருநாமமும், இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு மத்தியம் 12 மணி முதல் 1.00 மணிவரை சிரார்த்த பூஜை நடைபெறுகிறது. மற்ற நேரங்களில் சிரார்த்த பூஜை கிடையாது. இத்தலத்து பெருமாள் சிரார்த்த பெருமாள் என்று அழைக்கின்றனர்.

தல வரலாறு:
இத் திருக்கோயில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே நிறைவு செய்வதாக பெருமாள் வாக்களித்தார்.

அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

பெருமாளுடன் ஸ்ராத்தம்
இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இத்தலத்தில் சிரார்த்தம் செய்பவர்களுடன் பெருமாளும் சேர்ந்து சிரார்த்தம் செய்வதாக ஐதீகம். அனைத்து அமாவாசைகளில் இத்தலத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. அகால மரணமடைந்தவர்களின் ஆத்மாக்களை இத்தலத்து பெருமாள் சாந்தியடையவைக்கிறார்.

குடும்பத்தில் மறைந்த நம் முன்னோர்களுக்கு இத்தலத்தில் சிரார்த்தம், திதி செய்தால், நம்முடன் பெருமாளும் சேர்ந்து நம் முன்னோருக்கு திதி சிரார்த்தம் செய்வதாக ஐதிகமாக இருப்பதால், நம் முன்னோரின் ஆத்மா பலமடைந்து மகிழ்வதுடன் இறைவனுடன் ஒன்றுகலக்க வைக்கிறது. இதனால் கெடுதல் செய்யும் ஆத்மாக்கள் மன சாந்தியடைவதால், குடும்பத்தில் குழப்பங்களும், துன்பங்களும் மறைகிறது.


பிரசாதம்:
சிரார்த்தம் முடிந்ததும் ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயண ஸ்வாமிக்கு வெண் பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாக படைக்கப்படுகிறது.
இத்தலத்தில் சிரார்த்தம் செய்த அன்பர்களுக்கு அந்த பிரசாதத்தையே மதிய உணவாகவும் வழங்கப்படுகிறது.
வெண் பொங்கள், தயிர் சாதம், பிரண்டை எள்ளு சேர்த்த துவையலை மட்டுமே ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார் ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர்.

பலன்கள்:
தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று சிரார்த்த பூஜையில் கலந்து கொள்ளலாம். ராமேஸ்வரம், காசி, கயா போன்ற தலங்களில் ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும்.

அனாதைகளுக்கும் சிரார்த்தம்:
அனாதையாக மரணமடையும் அனைவருக்கும் இத்தலத்து பெருமாளே சிரார்த்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

முன்பதிவு:
இத்தலத்தில் சிரார்த்த பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்துவிட்டுச் செல்ல வேண்டும். சிரார்த்தம் முடிந்ததும் வழங்கப்படும் பிரசாதத்தை முன்கூட்டியே தயாரிக்க ஏதுவாக அன்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தல முகவரி:
Sri Sampath Bhattacharyar, Brahmana street, Nenmeli and post,
Via Nandham, Chengalpat - 603002. Kanchipuram District. Ph : 044-27420053.