logo
home ஆன்மீகம் ஜூன் 24, 2016
தீவினை மறைந்து நன்மைகள் பல உண்டாகும் சரபேஸ்வரர், தோன்றிய விதம் மற்றும் பலன் தரும் ஆலயங்கள்
article image

நிறம்

நரசிம்மர் இரணிய வதத்தில் அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங் கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சரபேஸ்வரர் ஆலயங்கள் தோன்றியவிதம்:

சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.

துக்காச்சி: 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தான் முதன்முதலில் சரபமூர்த்தியின் சிற்பம் அமைக்கப்பட்டது. விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) காலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோயிலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் வடிவங்களில் மிகப் பழமையானதாகும்.

தாராசுரம்:

தஞ்சை மாவட்டம், தாராசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும். இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் ராஜ கம்பீர மண்டபத்தின் மேற்குப்பக்கச் சுவரில் சரபேஸ்வரரின் அழகிய சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பத்தில் சிங்கத்தின் முகத்தினையும், கிரீடம் அமைந்த தலையும், விரிந்த இறகுகளையும் கொண்டு விளங்கும் சரப மூர்த்தியின் காலுக்கடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காணப்படுகின்றார். இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.


மாடம்பாக்கம்:

சென்னை, தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ள மாடம்பாக்கம், தேனுபூரீஸ்வரர் ஆலயம், இதே மூன்றாம் குலோத்துங்க சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும். நான்கு வேதங்களும் வந்து வணங்கியதால் இத்தலத்திற்கு சதுர்வேதமங்களம் என்ற பெயரும், காமதேனு வழிபட்டதால் காமதேனுபுரி என்ற பெயர்களும் உண்டு. இக்கோயிலுள்ள சரபேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகின்றது. இவரை வழிபடின் மனதால் எண்ணிய காரியங்கள் யாவும் விக்கினமின்றி உடனே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர். இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர். சரபரின் இரு இறக்கைகளாக விளங்கும் இவர்கள் சக்தியின் திருஅவதாரம் என்றும் கூறப்படுகின்றது. இம்மூவருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30-6.00க்கு நடைபெறும் ராகுகால பூஜை மிகவும் சிறப்புடையது. இதுமட்டுமேயல்லாது பிரதோஷ கால பூசையும் இங்கு சிறப்பாக வழிபடப்படுகின்றது.தொடர்ந்து ஆறு வாரங்கள் சரபேஸ்வரர் பூசையில் கலந்து கொண்டு தரிசித்தால் அவரவர் மனதில் நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுகின்றன என அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர். 

திரிசூலம்: 

சென்னையை அடுத்த திரிசூலம் என்னுமிடத்தில் அபூர்வமான கலையம்சம் நிறைந்த விக்கிரஹத்துடன் அமைந்துள்ளது இக்கோவில். ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர். இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார். இரு கைகளில் மான், மழுவினை ஏந்தியிருப்பதுடன், இரு கைகளால் நரசிம்மரை மடியில் கிடத்தி பிடித்துக்கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது சிறப்புமிக்க ஒன்றாகும்.


மயிலாப்பூர்:

ஸ்ரீ சரபேஸ்வரர் உருவம் ஆலயத்தின் தூணில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பங்குனித் திருவிழாவில் சோமாஸ்கந்தமூர்த்திக்கு ஒரு வாகனமாயும் அமைக்கப்பட்டுள்ளன. திருமயிலை தெற்கு மாட வீதியில் இருக்கும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.

கோயம்பேடு:

சென்னையிலுள்ள கோயம்பேடு குசலபுரீஸ்வரர் என்ற குறுங்காலீஸ்வரர் கோயில் மண்டபத் தூணில் காணப்படும் சரபேஸ்வரரின் வடிவம் மிக அற்புதமானது. உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம் தருகிறார்

திருவாரூர் கோயிலின் மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோயில் கிழக்குக் கோபுரம், மதுரை மீனாட்சி ஆலய தெற்குக்கோபுரம், சிதம்பரம் நடராஜர் ஆலயக் கோபுரம் இங்கெல்லாம் சரபேஸ்வரர் சுதை வடிவங்களில் காணப்படுகின்றார். இத்தகைய ஆலயங்களில் காணப்படும் சரப மூர்த்தியை வழிபட்டால் தீவினை மறைந்து நன்மைகள் பல உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- சித்தர்கள் தபோவனம்


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com