logo
home ஆன்மீகம் ஜூலை 20, 2016
சுகாசனமூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் சகல சுகங்களையும் அடைந்து இன்புற்ற வாழலாம் -ஆகமங்கள் கூறும் அதிசயம்
article image

நிறம்

திருக்கயிலையில் உமாதேவியார் சிவாகமங்களினது தத்துவங்களைத் தமக்குப் போதிக்க வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் சுகாசனத்தில் அமர்ந்து உபதேசித்த திருக்கோலமே சுகாசன மூர்த்தியாகும். சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என ஒன்பது வகை ஆசனங்கள் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு காலை இருக்கையில் மடித்தமைத்து மற்றொரு காலைத் தொங்க விட்டு அமர்ந்திருப்பதே சுகாசனம் ஆகம்.
சில்பரத்தினம், ஸ்ரீ தத்துவநிதி ஆகியவற்றில் சுகாசனமூர்த்தி திருவுருவம் விவரிக்கப்பட்டுள்ளது. சில்பரத்தினத்தின்படி, இம்மூர்த்தி, ஒரு முகமும் மூன்று கண்களும், நான்கு கரங்களும் கொண்டு பவளச் சிவப்பு நிறமுடையவராக - அழகுமிக்கவராக பத்ர பீடத்தின் மீது நிமிர்ந்து அமர்ந்திருப்பார். சுகாசனத்தில் அமர்ந்த இவர் புலித்தோலையும் பட்டாடைகளையும் அணிந்திருப்பார். அவரது பின் வலக்கரத்தில் மழுவும், பின் இடக்கரத்தில் மானும் திகழும், முன் வலக்கை அபயஹஸ்தமாகவும், முன் இடக்கை வரத ஹஸ்தமாக அல்லது சிம்ஹகரணமாகவும் அமைந்திருக்கும். வலக்காதில் மகர குண்டலம் அல்லது சிம்ஹ குண்டலமும் இடக்காதில் பத்ர குண்டலமும் இவர் தரித்திருப்பார், அல்லது இவரது இரு காதுகளிலும் வரத்த குண்டலம் திகழும். ஜடா மகுடம், சர்ப்பகங்கணம், யக்ஞோபவீதம் ஆகியவற்றையும் இவர் அணிந்திருப்பார். இவர், சோமாஸ்கந்த மூர்த்தத்தில் தேவியும் கந்தனும் நீங்கிய வடிவமாகக் காட்சி தருவார்.
சில நூல்களில் ஒரு முகமும் ஆறுகரங்களும் கொண்டு வலத்திருக்கை ஒன்று சின்முத்திரை காட்ட வேத சிவாகமப் பொருளை அம்பிகைக்கு உபதேசிக்கும் கோலமாக இவ்வடிவம் காட்டப்படுகிறது.
சிவபராக்கிரமம் என்ற நூலில் சிவபெருமானும் அம்பிகையும் சேர்ந்து சோமாஸ்கந்த வடிவத்தில் கந்தனின்றி அமைந்ததாகக் காட்டப்படுகிறது.
சுகாசனமூர்த்தியை வழிபடுவோர் வாழ்வில் சகல சுகங்களையும் அடைந்து இன்புறுவர் என்று ஆகமங்கள் கூறும்.

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com