logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
அனைத்து தடைகளையும் நீக்கி குடும்பத்தை வளமாக்கும் மகாளய அமாவாசை
article image

நிறம்

சூரியன் கன்னி ராசியில் புகும்போது (புரட்டாசி மாதம்) எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு செல்லும்படி உத்தரவிடுகிறார். அச்சமயம் நமது இறந்து போன பெற்றோர் அவர்களது பெற்றோர்களுடன் கூடி, நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை ஆகும். இதற்கு முன்னதாக வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை திதி) முதல், அமாவாசைக்கு அடுத்துள்ள பிரதமை வரை உள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்த சமயத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பானி, மஹாபானி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்கள் இந்த பட்சத்தின் பெருமையைப் போற்றிக் கூறியுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் பிதுர்வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இல்லறத்தார் கடமைகளில் முதல் கடமையாக முன்னோர் வழிபாட்டைக் (தென்புலத்தார் வழிபாடு) குறிப்பிடுகிறார். திருமணத்தடை, புத்திரப்பேறு இன்மை, கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் என்று வாழ்வின் அனைத்து விதமான சிரமங்களையும் போக்கும் ஈடுஇணையற்ற வழிபாடு இந்த பிதுர் வழிபாடு.