
வெண்ணை பிரான்': தஞ்சை மாவட்டம் சிக்கலில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் வெண்ணெய் பிரான் என்பதாகும். வெண்மதி சூடி, வெண் பொடி பூசி, வெள்ளை மலையில் உறையும் இந்த வெண்ணிறப் பெருமான், அடியார்கள் பணிந்து வேண்டினால் வெண்ணெயாக உருகி அருள்புரிவார் என்கிறார்கள். பயம் இல்லாதவர்: சிவபெருமானின் ஆயிரம் நாமங்களில் ஒன்று `ஓம் விபீஷணாய நம' என்பதாகும் விபீஷணன்' என்றால் `பயம் இல்லாதவன்' என்று பொருள். நமக்கெல்லாம் கடைசி பயம் மரண பயம். சிவபெருமான் காலனை வென்றவர், காலனை உதைத்தவர், காமனை எரித்தவர், பயம் இல்லாதவர். அதனால் அவருக்கு விபீஷணன் என்றும் பெயர் உண்டு. சிவலிங்க தத்துவம்: சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது. இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம். தேர் திருவிழா: எல்லா சிவன் கோவில்களிலும் தேர்த் திருவிழாவில் சோமாஸ்கந்த மூர்த்திதான் உலா வருவார். விதிவிலக்காக சிதம்பரம் கோவிலில் நடராஜரும், ஆலங்குடி கோவிலில் தட்சிணாமூர்த்தியும் உலா வருகிறார்கள்.