logo
home ஆன்மீகம் ஜூலை 29, 2017
கந்த சஷ்டி கவசம் உருவான அற்புதமான வரலாறும், பெறுமைகளும், பலன்களும்
article image

நிறம்

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்..! பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது...! ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது...! ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்..! அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...! அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது...! கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்...! பாம்பன் சுவாமிகள்...! பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்..! இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது...! சஷ்டி கவச பாராயண பலன்கள்..! ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்....! இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது....! குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.