logo
home ஆன்மீகம் ஜனவரி 26, 2019
நீங்கள் உண்மையான பக்திமானா? அறிந்து கொள்ள உதவும் கந்தபுராணம்
article image

நிறம்

‘பக்தி’ மற்றும் ‘ஆன்மிகம்’ ஆகியஇரண்டு பாதங்கள் குறித்து தவறான கருத்து பலர் மத்தியில் இருக்கிறது. இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டாலோ அல்லது விரதங்கள் அனுஷ்டித்தாலோ அல்லது பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வதாலோ ஒருவர் பக்திமானாகிவிடமுடியாது. ஏனெனில், இவையனைத்தும் ஒரு வகையில் சுயநலம் சார்ந்த செயல்களே. அது போல பணம் செலவழிப்பதால் மட்டும் ஒருவர் தர்மவான் ஆக முடியாது. அன்னதானம் செய்வதால் அவர் அறம் செய்தவர் ஆகவும் முடியாது. நெற்றியில் திருநீறு பூசியவர்கள் எல்லாம் சிவ பக்தர்கள் அல்ல. திருமண் இட்டவர் எல்லாம் விஷ்ணு பக்தரும் அல்ல. பலர் பகட்டுக்காகவும், நானும் பக்திமான் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், பெருமைக்காவுமே இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஏழைகளின் தொண்டே இறைவனின் தொண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒருவர் துன்பப்படும் போது அவருக்கு துணை நின்று அவர் துயர் துடைப்பதே ராம கைங்கர்யம். உதவி செய்பவர் ஏழையாக இருக்கலாம். நெற்றியில் திருமண் இடாதவராக, பஜனை, ஜெபம், வழிபாடு அறியாதவராக இருக்கலாம். இருப்பினும் ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்து துயர் துடைக்க முன்வருவாரே ஆயின் அவரே உண்மையான உயர்ந்த பக்தர். உண்மையான பக்தி உடையவன் யார்? ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது, நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், “தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்” என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவன், “நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை… தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,” என்றான். அடுத்தவன், “நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,” என்றான். மற்றவன், “நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,” என்றான். இன்னொருவன், “எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,” என்றான். இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, “இதில் யார் உண்மையான பக்தன்’ எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது. அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, “அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?” என்று ஒரு தேவதை கேட்டது. அதற்கு அவன், “எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை… அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்…” என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான். தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன. எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார். “தேவனே… உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டன. “கண்டுபிடித்துவிட்டேன்!”என்றார் கடவுள். “யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?” என்று கேட்டன தேவதைகள். கடவுள் புன்னகைத்தபடியே, “இல்லை… இல்லை… கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே… உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,” என்றார். உண்மை புரிந்தது தேவதைகளுக்கு. தன்னலமற்ற சேவையே உண்மையான ஆன்மிகம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். தன்னை ஒரு பக்தனைப் போல காட்டிக்கொள்வது எளிது. ஆனால் உண்மையான பக்தனாக நடந்துகொள்வது அத்தனை எளிதல்ல. ஒரு பக்தன் அல்லது பக்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். தெளிவான அறிவோடு இருக்க வேண்டும். எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். உணர்ச்சியை வென்றவனாக நடந்து கொள்ள வேண்டும். எவரிடமும், எந்த விதத்திலும் பகைமை பாராட்டாதிருக்க வேண்டும். எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும். தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப – துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும். பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல், அவனுக்கு உதவ வேண்டும். மேற்கூறிய குணநலன்கள் இருந்து, ஈடுபாடுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ, அவனே உண்மையான பக்தன். இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் முருகப்பெருமான். இது முருகப்பெருமானுக்கு மட்டும் அல்ல அனைத்து தெய்வங்களுக்கும் பொருந்தும். மேற்கூறிய குணநலன்கள் உங்களிடம் இருக்கிறதா? ‘ஆம்’ என்று உங்கள் மனசாட்சி சொன்னால் நீங்கள் உண்மையில் பெரிய பக்திமான் தான்!