logo
home ஆன்மீகம் ஜனவரி 11, 2022
போகி பண்டிகை: புத்துணர்ச்சியுடன் புதிய உதயத்தை தரும்
article image

நிறம்

போகிபண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகையாகும், அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் தீயவற்றையும், தேவையற்றவைகளையும் அக்னி பகவானிடம் கொடுப்பதையே போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் பக்கத்து மாநிலமான  ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது.

முக்கியமாக விவசாயிகளின் உழைப்பிற்கு ஊதியம் கிடைக்கும் மாதமான தை மாத துவக்கத்தின் முந்தைய நாளை , ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், அதுவரைபட்ட அனைத்து துன்பங்களையும் அக்னியிடம் சமர்ப்பிக்கும் நாளாக கொண்டாடப்பட்டதுதான் போகிப்பண்டிகை.

தை மாதத்திலிருந்து விவசாயம் மூலம் அதிக லாபம் கிடைக்கும், இதனால் புதியவற்றை வாங்கும் நிலை உருவாகும், அதுசமயம் பழையவற்றை, கழிக்க நினைத்த முன்னோர்கள் அதை அக்னியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டனர்.

இவர்கள் கடைபிடித்த முறை அதீத பலன் கிடைத்ததால், அனைத்து மக்களும் தை மாத முதல் நாளில், தங்களுக்கு தேவையற்ற பொருட்களையும், துயரத்தையும் அக்னிக்கு அர்ப்பணிப்பதை வழக்கமாக கொண்டனர்.

தமிழகத்தில் சித்திரை மாதத்தை வருடப்பிறப்பாக கொண்டாடினாலும், அக்காலத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழிலே பிரதானமாகவும், அனைத்து மக்களும் அதை செய்ததாலும், லாபம் தரும் அறுவடை மாதமான தை மாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.

போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் விவசாயிகள், பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவாகவே போகிப் பண்டிகையை கொண்டாடினர்.

தைமாதத்தின் துவக்கத்திலிருந்து செழிப்பாகவும், இதுவரை பட்ட துயரங்கள் மறைய வேண்டும், என்பதாலும், உடல் அளவிலும், மனதளவில் பழையவற்றை துறந்து புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க, பழையவற்றை அக்னியிடம் சமர்ப்பிப்பதை வழக்கமாக கையாண்டனர் நம் முன்னோர்கள். இதற்கு மார்கழி கடைசி நாளை பயன்படுத்தினர்.

இந்த தினத்தில் பழைய பொருட்களை மட்டுமல்ல இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். 

பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இந்த தினத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதை சூசகமாக கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.

தமிழகத்தில் பொங்கல் தினத்தை கொண்டாடுவது போன்று,  இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர். பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி என்று பெயர் மாறி கொண்டாடினாலும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீண் மனத்துயரம், பிரச்சனைகள் சந்திக்கும் அனைவரும் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு தேவையற்றதை பொருளை இந்த போகி தினத்தன்று அக்னி பகவானுக்கு காணிக்கை அளித்தால் அடுத்த நாளில் இருந்து புத்துணர்ச்சியுடன் புதிய உதயத்தை பெறலாம் என்பது நம்பிக்கை.

போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைத்து வணங்கினால் அற்புத பலன் கிடைக்கும்