logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 18, 2022
கிருஷ்ணர் செய்த லீலைகளும் எளிமையான வாழ்க்கை குறிப்பும்
article image

நிறம்

கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும். 

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால்  கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். 

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்-சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார். 

அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். 

பராசுரன் கொக்காகவும், 

தேனுகாசுரன் கழுதையாகவும், 

பிரலம்பன் சிறுவனாகவும், 

அரிஷ்டன் காளையாகவும், 

கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார். 

இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். 

இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.

கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா-இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாஹூ, விருபன், கவிநியோக்தன்.