
மகாலட்சுமியை வழிபடுவோரும் நல்ல நோக்கம், நன்னடத்தை, சோம்பலின்மை ஆகியவை உடையவர்களாக இருக்க வேண்டும். தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அத்தகையவர்களுக்கே இவளின் அருள் கிட்டும்.மகாலட்சுமி பொதுவாக அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள்.நிம்மதியான சந்தோஷமான வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள். அஷ்ட லட்சுமிகள் 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜயலட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி. ஒவ்வொரு யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் புராணங்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தகலட்சுமியாகவும், வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும், பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள். மேலும் லட்சுமி தேவிக்கு பல பெயர்கள் உள்ளன தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு எனத் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்றால் வடமொழியில் ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி,சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டிலக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி,மோட்ச லக்ஷ்மி என இவளுக்கு பெயர்கள் அநேகம். ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட லக்ஷ்மிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். செல்வத்தின் தெய்வம். ஸ்ரீவிஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லக்ஷ்மி திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லக்ஷ்மிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவர் லட்சுமிபதி என கொண்டாடப்படுக்கிறார்.. எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லக்ஷ்மிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணைஉள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.