
மகா சிவராத்திரி நன்னாளில், நான்கு கால பூஜைகள் சிவனாருக்கு அமர்க்களமாக நடைபெறும். அப்போது ஒவ்வொரு கால பூஜையிலும் என்ன அபிஷேகம், எந்த நைவேத்தியம், எதைப் பாராயணம் செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள் நமது சிவத் தொண்டர்கள். முதல் கால பூஜை : பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம், வில்வம் மற்றும் தாமரையால் அர்ச்சனை, பச்சைப் பயிறு பொங்கல் நைவேத்தியம். ரிக்வேத பாராயணம் செய்வது குடும்பத்தில் வளம் சேர்க்கும்! இரண்டாம் கால பூஜை: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த அபிஷேகம். பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி மற்றும் வில்வ அர்ச்சனை, பாயசம் நைவேத்தியம், யஜுர் வேத பாராயணம் செய்தால், வாழ்வை இனிக்கச் செய்யும், சந்ததி சிறக்கும்! மூன்றாம் கால பூஜை: தேனபிஷேகம். பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை மற்றும் வில்வத்தால் அர்ச்சனை. எள் அன்னம் நைவேத்தியம், சாமவேத பாராயணம் செய்தால், பித்ரு சாபம் நீக்கும், சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்கும்.! நான்காம் கால பூஜை: கருப்பஞ்சாறு அபிஷேகம். அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்த மலர்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை, சுத்தான்ன நைவேத்தியம், அதர்வண வேத பாராயணம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! நிம்மதி தரும்! மேற்கண்ட அபிஷேகங்கள் செய்ய பணவசதி அல்லது உடல்நிலை சரியில்லாத நிலை இருந்தால் மனதார சிவமந்திரங்களை பாராயணம் செய்தாலும், மேற்கண்ட பலனுடன் சிவபெருமானின் கருணைப் பார்வை கிடைக்கும்.