
நாம் பொதுவாக அஷ்ட சித்தி கைகூடினால் ஒருவன் தெய்வத்திற்கு இணையாக இருப்பான் என்று முன்னோர்கள் கூறியதை கேட்டிருப்போம், சரி அந்த அஷ்ட சித்தி என்பது என்ன? அதன் பயன் எண்ண என்று யோசித்திருப்போம், அவ்வாறான கேள்விக்குண்டான பதில் நமது ஆன்மீக மலர்.காம் உங்களுக்கு விளக்குகிறது. அஷ்டமா சித்திகள் 1. அணிமா 2. மஹிமா 3. லஹிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம் அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரமும் விளக்குகிறது அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது. பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும். மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும். லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும். கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல். அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும். ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும். வசித்துவம் ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.