logo
home ஆன்மீகம் ஜூலை 21, 2017
மார்க்கண்டேயனால் உருவான திருக்கழுகுன்றம் சங்கு தீர்த்தம்
article image

நிறம்

தவமாய் தவமிருந்து மிருகண்டு முனிவரும், மருத்துவதியும் நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாததால் ஈசனை நோக்கித் தவம் செய்தனர். நீண்ட ஆயுளும் சொற்ப அறிவும் உடைய மகன் அல்லது நிறைந்த ஞானமும் குறைந்த வாழ்நாளும் உடைய மகன் இவர்களில் எவர் வேண்டும் என ஈசன் கேட்டார். அவர்களோ நிறை ஞானம் உள்ள மகன் வேண்டுமென கேட்டனர்.
பதினாறு வயது மட்டும் ஆயுள் உள்ள மார்க்கண்டேயர் மகனாகப் பிறந்து சிவபக்தி சிந்தையில் கொண்டு வளர்ந்து வந்தார். பதினாறு ஆண்டுகள் பூர்த்தியாகும் நேரம்! தர்மப்படி உயிரை எடுக்க வந்த எமதூதர்கள், மார்க்கண்டேயன் சிவ பூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அஞ்சினர்.
எமகிங்கரர்கள் உயிர் பறிக்க வந்திருப்பதைக் கண்டு கவலை மேலிட சிவலிங்கத்தை இருகரங்களாலும் இறுக்கிக் கொண்டு சிவ நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதன்பின்னர், தர்மராஜனே எருமைக்கடா மீது ஊர்ந்து வந்தார். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டி அணைத்திருப்பதைக் கண்டு பாசக் கயிற்றினை வீசினார். பாசக் கயிறோ மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து வளைத்து இழுத்தது.
அப்போது, இறைவன் ருத்ர மூர்த்தியாய் சிவலிங்கத்திலிருந்து வெளித்தோன்றி காலனை காலால் எட்டி உதைத்தார். மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார் எமதர்மன்.
பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளின்படி எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளிய வைத்தார். பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக வாழ மார்க்கண்டேயனுக்கு அம்பலத்தரசர் அருளினார்.
மார்க்கண்டேயன், ஒவ்வொரு தலமாகச் சென்றபோது, வேதங்கள் வணங்கிய திருக்கழுகுன்றத்தில் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரரை வணங்க விரும்பினார்.
திருக்கழுக்குன்றத்திற்கு மார்க்கண்டேயன் வந்த நேரம் குருபகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும் காலமாக இருந்தது. அங்கு உள்ள குளத்தில் நீராடி, சிவபூஜை செய்யும் முன் விநாயகரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் எடுக்க அவரிடம் பாத்திரம் ஏதும் இல்லை. ஈசனைத் தொடர்ந்து துதித்தார்.
சாதாரணமாக, சங்கு உவர் நீரில்தான் பிறக்கும் ஆனால் சிவனருளினால் அன்றைக்கு அந்த நன்னீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளி வந்தது.
இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை பெற்று அதை கொண்டு சிவனுக்கு அபிசேகம் செய்தார். மாலையில் தீபமிட்டு வணங்கினார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அக்குளத்திற்கு "சங்கு தீர்த்தம்' என்று பெயர் உண்டானது. அகண்ட இந்த பாரத தேசத்தில் புகழ்பெற்ற இந்த சங்கு தீர்த்த புஷ்கர மேளா நாளில் லட்சதீபம் ஏற்றி வழிபட குருபலம் பெருகும்.
அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை, காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி , தாமிரபரணி, துங்கபத்திரா ,தென்குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை. பாலி பிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை. வேத்தராவதி, கைதாரிணி, வைகை முதலிய நதிகளுக்குள் தாங்களே உயர்ந்தவர்கள் என அவர்களுக்குள் கடுஞ்சண்டை தோன்றியது. அந்த நதிகளுக்குள் சமாதானம் ஏற்படாத நிலையில் குரு கன்னிகாராசியில் பிரவேசம் ஆகும் தினத்தில் அனைத்து நதிகளும் சங்கு தீர்த்தத்தில் சென்று வேதகிரீஸ்வரரை வணங்கி தங்களில் உயர்ந்தவர் யார் என்பதை முடிவு செய்து கொள்ள தீர்மானித்தன.
அனைத்து நதிகளும் அன்றைய தினத்தில் அவரவர் துணைவருடன் வந்து திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை வணங்கி நின்றன. அன்று முதல் அனைத்து நதிகளும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை விட்டு, பாவம் ஒழிந்து ஜீவநதி என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு பலன் பெற்றன.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.