logo
home ஆன்மீகம் செப்டம்பர் 21, 2017
நவராத்திரியின் முதல் நாள் தெய்வம் சாமுண்டி, தீயவற்றை அகோரமாக அழிக்கும் தெய்வம்
article image

நிறம்

நவராத்திரியின் முதல் நாள் தெய்வம் சாமுண்டி தேவியாகும். இந்த தேவி மிகுந்த ஆக்ரோஷம் நிறைந்தவளாக இருந்தாலும், இவளின் கோபம் நியாயமானதாகவும் தீயவற்றை துவம்சம் செய்யும் ஆற்றல் படைத்ததாகும்.
நவராத்திரியின் முக்கிய காரணமான சண்ட, முண்ட வதத்தில் துர்க்கா தேவியின் உடனிருந்து, தேவியின் படைகளில் ஒருபிரிவின் தலைவியாக இருந்து தேவிக்கு உதவியவள், சப்த கன்னியர்கள் வழிபாட்டில் மிக முக்கிய தேவியாக விளங்குபவள், சப்த கன்னியர்களில் ஒருவராக அருள்பாலிப்பவள் சாமுண்டி தேவியாவார்.
சிவனின் அம்சமான ருத்ர அவதாரத்தின் அம்சத்தை பெற்றவள் சாமுண்டி, நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார்.
இந்த தேவியின் முக்கிய அவதார நோக்கமே சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழிப்பதேயாகும்.
இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும்.
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதற்கேற்ப இந்த தேவியை வழிபட்டால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர். மேலும் குடும்பத்தில் உள்ள குழப்பங்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் தீர்வு கிடைக்கும். துர்தேவதைகளை அடக்கும் ஆற்றல் இந்த சாமுண்டிக்கு உண்டு.