கடவுளர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் ஆலயங்களும் இருக்கின்றன. திருவிழாக்காலங்களின் போது மட்டும் அபிஷேக ஆராதனை காணும் ஆலயங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அங்குள்ள இறைவனுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை தினத்தன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த வகையில் தேவர்களின் வைகறைப் பொழுதானது மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும். அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும். உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும். அந்த மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம், உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனிமாதம் உத்ரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை அபிஷேகம் செய்யப்படுகிறது. அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்த சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிமாத உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டைப் போல இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், ஈழத்துச் சிதம்பரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவன் தலங்களிலும் ஆனி உத்ர விழா சிறப்பாக நடைபெறுகின்றன. சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடைபெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். மூ.சக்திவேல். phone: 09787576858
நிறம்