logo
home ஆன்மீகம் ஏப்ரல் 22, 2018
கோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்?
article image

நிறம்

ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோயில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த திரவியங்கள் எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் உள்ளது. சிலைகளுக்கு ஏன் இப்படி விதவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும்? அதற்கு முக்கியமான காரணம். ஒரு கோயிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும். இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா? சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே? அப்படித்தான் இறையருளை மந்திர, யந்திர ஸ்தாபனங்கள் மூலம் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் அபிஷேகம் முதலானவை அவசியமாகிறது. இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் கண்டுபிடித்துவிட்டனர். எனவேதான் கோயில்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்துப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேகப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க கைங்கர்யம் செய்வதற்கு வசதியாக கோயில் சொத்தாக நிலங்களை எழுதி வைத்தனர். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். அதேபோல எந்த வகை அபிஷேகம் செய்தாலும் அதனை ஒரு நாழிகை, அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில கோயில்களில் அவற்றின் நடைமுறை வழக்கப்படி இரு நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. இது, ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிலை பிரதிஷ்டை பந்தன விதிகளை ஒட்டி மாறுபடுவதும் உண்டு. அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து வாசனைதீர்த்தமாக அபிஷேகம் செய்வது சிறந்தது. முற்காலத்தில் மூலவிக்ரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகங்களுள் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றைத் தவிர மற்றவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆகமப்படி இவை தவிர மற்ற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்கக்கூடாது. என்றாலும் பல கோயில்களில் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். கருவறையில் கற்சிலையாகக் காட்சிதரும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே ஈர்த்து அதைக் கோயில் முழுவதும் பரவச் செய்கிறது. அந்த ஆற்றலானது அபிஷேகம் செய்வதால் பலமடங்கு அதிகரிக்கிறது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த இந்த உண்மையை, இன்றைய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளனர். பழமையான கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், ஆற்றல் வாய்ந்த மந்திரத் தகடும் (யந்திரம்) பதிக்கப்பட்டு உள்ளன. இந்த யந்திரமும், மூலிகைகளும் வெளிப்படுத்தும் ஆற்றலும் அபிஷேகத் தீர்த்தத்தில் கலக்கிறது. அதனால்தான் அதனைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் சிறிதளவு உட்கொண்டாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றது. அபிஷேகம் செய்யச் செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர்மின்னூட்டியின் அளவு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளியின்வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருவதாகவும். அது கோயில் முழுதும் பரவி, பக்தர்கள் மனதில் பக்தி உணர்வினை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள். அபிஷேகத்தின் போது சொல்லப்படும் மந்திர ஒலி, சிலை மீது பட்டு நேர் அயனியாக வெளிப்படுகிறது. நேர் அயனியை சிவமாகவும், எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தி ஐக்கிய பாவத்திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். அந்த ஆற்றல் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கருவறையில் இருந்து கோமுகம் வழியே சென்று, பின் அபிஷேக திரவியங்கள் நேராக கோயில் திருக்குளத்தை சென்றடைய வழிவகை செய்திருந்தனர். அதுபோலவே அபிஷேகத்துக்கு உரிய பொருளை நேரடியாக எடுத்துவந்து தருவதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் வந்து பின்னர் கொடுப்பதே நல்லது என்பதால்தான், பால் காவடி முதலானவற்றைச் சுமந்துவருபவர்கள் கோயிலை வலம் வந்து அளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு. அதனாலேயே எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். பால் அபிஷேகம் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்குச் செய்யப்படும்போது அது மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல முருகனுக்குத் திருநீறு, பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்போது அளவுகடந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதன் காரணமாக பக்தர்கள் வாழ்க்கையில் செழுமையும் நலமும் நிறைகிறது. ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோயில்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை. கோயிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும். மனமும் உடலும் தூய்மை பெறும்.