பொதுவாக அனைத்து ஆலயம்களும், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஒரு கால பூஜை, நான்கு கால பூஜைகள் ,ஆறு கால பூஜைகள் என நடத்துவதுதான் வழக்கம். ஆனால் வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் இரவு நடை திறந்து, நள்ளிரவு 12 மணிக்கு பின்பே சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே குவிகின்றனர். திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் இந்த ஆலயம், வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; ஆம்!அந்த நாள்.... பொங்கல் திருநாள்!.....தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில்... தென்னாடுடைய சிவன் தில்லையம்பதியில் நடராஜப் பெருமானாக எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு, தென்திசை நோக்கி வந்தபோது சோமவார தினத்தில் நள்ளிரவில் வந்தாராம். அப்போது, இரண்டு முனிவர்களிடையே நடைபெற்ற இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என்ற வழக்கில் தென் சிதம்பரம் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டையில் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்ததுதான் என மத்தியஸ்தம் செய்து ஈசன் வைத்ததால், இங்கு அவருக்கு மத்தியபுரீசுவரர் எனறும், ஈசன் முனிவர்களுக்கிடையே உண்மை பொருளை இங்கு உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். 'அய்யனே தாங்கள் இங்கிருந்தபடி பக்தர்களுக்கும் அருள வேண்டும்'' என்று முனிவர்கள் வேண்ட, ''அப்படியே ஆகட்டும்'' என்றார் ஈசன். அவரும் அங்கிருந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இந்தக் கோயிலில் ஈசன் வெள்ளால மரத்தில் எழுந்தருளி இருப்பதால், அந்த மரத்தின் இலை பிரசாதமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பீரோ, பணப் பெட்டி, தானியக் குதிர் ஆகியவற்றில் வைத்து வழிபட வளமான வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம். மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் ஈசன் , இங்கே வெள்ளால மரமாகவே காட்சி தந்து அருள்கிறார். முனிவர்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் அங்கிருந்து இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்பே சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது..
நிறம்