logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 16, 2024
ஆவணிமாத சிறப்புகளும், 2024 ஆவணி மாத விஷேச தினங்களும்
article image

நிறம்

ஆடிமாதம் எப்படி அம்மனுக்கு முக்கிய மாதமோ? அதே போன்று ஆவணி மாதம் கூட ஆன்மிகத்தின் முக்கிய மாதமாகவே விளங்குகிறது, அந்தவகையில் ஆவணி மாதத்தின் சிறப்புகளையும், விஷேச நாட்களையும், விரிவாக பார்ப்போம்

ஆவணி மாத சிறப்புகள் :

தமிழ் நாட்காட்டியில் ஐந்தாவது மாதமாக வருவது ஆடி மாதம். இது தமிழ் சந்திர மாதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பயணிக்க துவங்கம் மாதம் ஆவணி மாதமாகும். முழு முதற் கடவுளான விநாயகர், திருமாலின் மிக சிறப்பான அவதாரங்களான கண்ணன், வாமனர் அவதாரங்கள் அவதரித்தது இந்த ஆவணி என்பதால் இதை அற்புதங்கள் நிறைந்த மாதம் என போற்றுகிறார்கள்.

ஆவணி மாதமானது சிங்க மாதம் என்றும், மாதங்களின் அரசன் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் , ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி:

விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தியின் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டடை, அப்பம் ஆகியவை நைவேத்தியமாக படைத்து, அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி ஆகியவை படைத்து வழிபடுவது சிறப்பானது. சதுர்த்தகி விரதம் இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தியில் துவங்குவது வழக்கம். சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் செல்வ செழிப்பு, காரிய வெற்றி, புத்திகூர்மை, குழந்தை பேறு, தொழில்வளம், உடல் ஆரோக்கியம் ஆகியவை பெருகும்.

மஹா சங்கடஹர சதுர்த்தி :

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களும் ஆவணி மாத மகாசங்கடஹர சதுர்த்தியில் துவங்குகின்றனர். சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் போது பகல் முழுவதும் உண்ணாமல் மாலை வேளையில் விநாயகர் வழிபாடும், சந்திர தரிசனமும் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சங்கடஷர சதர்த்தி வழிபாட்டின் போது விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சங்கடநாசன கணபதி வடிவத்தை வணங்க வேண்டும். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு அனைத்து துன்பங்களையும் நீக்கி, செளபாக்கிய வாழ்வு தரக் கூடியது.

​கிருஷ்ண ஜெயந்தி :

இறைவனை குழந்தைப் பருவமாக பாவித்து வழிபடுவதில் முதலிடம் கிருஷ்ணனுக்கு தான். திருமால், கண்ணனாக அவதரித்தது ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திர நாளில் தான். இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணேய், இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், சீடை, தட்டை, தேன்குழல், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவை படைத்து வழிபடப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டும், வீடுகளில் கண்ணனின் பாதம் வரைந்தும் கண்ணனை வீட்டிற்கு அழைக்கும் வழக்கம் உண்டு. கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஓணம்:

ஆவணி மாத பெளர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவிலும், தென்தமிழகம் மற்றம் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம், ஓணம் விருந்து ஆகியன இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும். ஆவணி மாத அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை மொத்தம் 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். இது கேரளாவின் அறுவடை திருநாள், கேரள தீபாவளி, கேரள புத்தாண்டு என பல பெயர்களில் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போது கசப்பு சுவை தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயார் செய்து ஓண விருந்தளிப்பது சிறப்பு.

ஆவணி மூலம் :

ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று. 12 நாட்கள் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சொக்கர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை நினைகூறும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது. இதில் 10 திருவிளையாடல்கள் நடத்தப்படும். ஆவணி மூலத் திருவிழாவின் போது சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படும். இதற்கு பிறகு 5 மாதங்கள் மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆட்சி தான் நடைபெறும். ஆவணி மூலத்தன்று சூரியன் உதயமாகும் போது வெப்பம் அதிகமாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் வெயில் வாட்டும் என்றும், மாறாக மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் காலநிலை சிறப்பானதாக இருக்கும் என்பது ஐதீகம்.

ஆவணி அவிட்டம்:

ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படுவது ஆவணி அவிட்டமாகும். இந்த நாளில் உபநயனம் பெற்றவர்கள் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள். வேதங்களை படிக்க துவங்குவதற்கும் இந்த நல்ல நாளாகும்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம், ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி மாத பெளர்ணமியை பொறுத்தே இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டு, மகாலட்சுமிக்கு இனிப்புகள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயசம், உளுந்துவடை, பலவிதமான பூக்கள் ஆகியவற்றை படைத்து வழிபடுகின்றனர். திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப நன்மை, ஆரோக்கியம், தாலி பாக்கியம், கணவரின் ஆயுள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை இருக்கிறார்கள். கன்னிப் பெண்கள், நல்ல கணவர் மற்றும் வளமான வாழ்க்கை அமைய வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.

ஆவணி மாதம் 2024 - விசேஷங்கள்
  • 17 Sat    சபரிமலையில் நடை திறப்பு , பிரதோஷம்
  • 19 Mon    ஆவணி அவிட்டம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , ரக்ஷா பந்தன் ,   திருவோண விரதம்
  • 20 Tue    காயத்ரி ஜபம்
  • 22 Thu    சங்கடஹர சதுர்த்தி விரதம் , சங்கடஹர சதுர்த்தி
  • 24 Sat    பலராம ஜெயந்தி
  • 25 Sun    கார்த்திகை விரதம்
  • 26 Mon    கிருஷ்ண ஜெயந்தி , 
  • 29 Thu    ஏகாதசி விரதம்
  • 31 Sat    பிரதோஷம்
  • 01 Sun    மாத சிவராத்திரி
  • 02 Mon    சோமவார விரதம் , அமாவாசை
  • 04 Wed    சந்திர தரிசனம்
  • 06 Fri    ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி விரத , சாம உபாகர்மம்
  • 07 Sat    சதுர்த்தி விரதம் , விநாயகர் சதுர்த்தி
  • 08 Sun    ரிஷி பஞ்சமி , 
  • 09 Mon    சஷ்டி விரதம்
  • 11 Wed    பாரதியார் நினைவு நாள் , மஹாலக்ஷ்மி விரதம் , ராதாஷ்டமி
  • 14 Sat    ஏகாதசி விரதம்
  • 15 Sun    திருவோண விரதம் , பிரதோஷம் , ஓணம்
  • 16 Mon    விஸ்வகர்மா ஜெயந்தி , கன்னி சங்கராந்தி 
​ஆவணி மாதம் 2024 சுபமுகூர்த்த நாட்கள்:
  • ஆகஸ்ட் 22- ஆவணி 06 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
  • ஆகஸ்ட் 23 - ஆவணி 07 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
  • ஆகஸ்ட் 30 - ஆவணி 14 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
  • செப்டம்பர் 05 - ஆவணி 20 (வியாழன்) - வளர்பிறை முகூர்த்தம்
  • செப்டம்பர் 06 - ஆவணி 21 (வெள்ளி) - வளர்பிறை முகூர்த்தம்
  • செப்டம்பர் 08 - ஆவணி 23 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
  • செப்டம்பர் 15 - ஆவணி 30 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
  • செப்டம்பர் 16 - ஆவணி 31 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
ஆவணி மாதம் 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி - ஆகஸ்ட் 26 (திங்கள்) ஆவணி 10,  செப்டம்பர் 11 (புதன்) ஆவணி 25
நவமி - ஆகஸ்ட் 27 (செவ்வாய்) ஆவணி 11, செப்டம்பர் 12 (வியாழன்) ஆவணி 27
கரி நாட்கள் - ஆகஸ்ட் 18 (ஞாயிறு) ஆவணி 02, ஆகஸ்ட் 25 (ஞாயிறு) ஆவணி 09, செப்டம்பர் 13 (வெள்ளி) ஆவணி 28

ஆவணி மாதம் 2024 வாஸ்து நாட்கள் :

ஆகஸ்ட் 22 (வியாழன்) ஆவணி 06 - காலை 07.23 முதல் 07.59 வரை.