ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம். இதனால்தான் எந்த செயலைச் செய்யும்போதும் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக நம் முன்னோர் கூறிய கதைதான் இது. நமக்கு தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள், தேவதூதர்கள் இருப்பார்களாம். நாம் சொல்வதற்கெல்லாம் 'ததாஸ்து'அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுப்பார்களாம். இனி பேசும் போது மிக கவனமாக பேச வேண்டும். தீய வார்த்தைகளை குறைத்து நன்மை தரும் வார்த்தைகளையே பயன்படுத்துவோம். உதாரணமாக, “ராம்... ராம்...”... “சிவசிவ” என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவோம். -ஆன்மிக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன். 85262233399
நிறம்