logo
home ஆன்மீகம் மார்ச் 06, 2016
வாழ்க்கையில் அவசியம் மேற்கொள்ளவேண்டிய, அற்புதம் மிகுந்த சிவராத்திரி விரதமும், நான்குகால பூஜை முறைகளும்!
article image

நிறம்

மகா சிவராத்திரி! ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய், பிரமாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகா சிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது. உலக மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனாரையும் உமையவளையும் வணங்கித் தொழவேண்டிய தினம். உலகம்மை, உலக மக்களுக்காக, சிவனாரை பூஜித்த திருநாள் இது! பிரபஞ்சத்துக்கு பிரளயம் மிகவும் அவசியம். அப்போது உலகம், சிவனாரிடம் ஒடுங்கும். அப்படிப் பிரளய நாளில்... ஒடுங்கும் தருணமே சிவராத்திரி என்கிறது புராணம். அந்தநாளில் ஈசனைத் தவிர எவரும் இல்லை. அதேநேரம் சிவனாரில் பாதியான சக்தியும் உடனிருந்தாள் என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்! இந்த நாளில்... முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் சகல வளங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ முடியும். ‘இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும்!’ என பார்வதி தேவி சிவனாரிடம் கேட்க, ‘அப்படியே ஆகட்டும்’ என வரம் தந்தருளினார் ஈசன்! எனவே, மற்ற நாளை விட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்! இதனால் உலகில் உள்ள அனைத்து சிவத்தலங்களிலும் மகா சிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களும் பூக்களும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்! சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்து எதுவும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருள் கிடைக்கப் பெறலாம். இம்மையிலும் மறுமையிலும் காத்தருள்வார் சிவனார்! சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், ‘சிவ சிவ’ என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கியது. அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் சிவனார் என்கிறது புராணம்! சிவராத்திரி மகிமையை சிவனாரே நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தார். பின்னர் நந்திதேவர் சிவகணங்கள் அனைவருக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக உபதேசித்தார். இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!