logo
home ஆன்மீகம் மார்ச் 25, 2016
ஆண்டாள் திருக்கோவிலுக்கு புகழ் பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் உருவான கதை
article image

நிறம்

சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் இருந்த வனப்பகுதியாக இருந்த இடம்தான் இன்றைய ஸ்ரீ வில்லிபுத்தூர். இவ்வனப்பகுதி ஊராக மாறிய வரலாறு சுவாரஸ்யமானது. ஆதிகாலத்தில் இந்த வனப்பகுதியை மல்லி என்ற வேடவப் பெண் ஆட்சி செய்து வந்தாள். இந்த வேடவ அரசிக்கு வில்லி, கண்டன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அடிக்கடி வேட்டையாடுவதற்கு காட்டிற்கு செல்வது வழக்கம். இப்படி ஒரு சமயம் வேட்டைக்கு செல்லும்போது கண்டன் புலி தாக்கி இறந்து விட்டான். இவன் இறந்தது தெரியாத வில்லி அவனைத் தேடி காட்டிற்கு சென்றான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, களைப்பு அவனை வாட்டியது அவனையறியாமல் ஒரு மரத்தடியில் உறங்கிவிட்டான். அந்த சமயம் அவனுக்கு கனவில் பெருமாள் காட்சி தந்தார், “உன் தம்பி புலி தாக்கி இறந்து விட்டான், அவனை நான் உயிர் பெற வைக்கிறேன், மேலும் தான் காட்டில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் உள்ளேன். இந்த காட்டை அழித்து எனக்கு இங்கேயே ஒரு கோயில் கட்ட வேண்டும்’’ என்று கூறினார். உடனே கண்விழித்த வில்லி, தன் தம்பி கண்டனும் வருவதை பார்த்து நடந்ததை அவனிடம் கூறினான். கண்டனும் தான் ஒரு புலியை வேட்டையாட துரத்திச் சென்றதும், அந்தப் புலி தன்னைக் கொன்றுவிட்டதையும், தான் மீண்டும் உயிர்பெற்றதையும் கூறினான். இருவரும் தங்கள் இருப்பிடம் சென்று நடந்ததை தன் தாய் மல்லியிடமும், மக்களிடமும் தெரிவிக்க, அனைவரும் கனவில் கூறிய ஆலமரத்தை தேடி காட்டிற்குள் வந்தனர். ஒருவழியாக ஆலமரத்தை கண்டுபிடித்து அதன் அடியில் தோண்டி பார்த்தனர். அப்போது வில்லி கனவில் கூறியபடி, பாம்பின் மீது படுத்தபடி பெருமாள் சிலையும், அதன் அருகில் பொற்காசுகளும் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்தப் பொற்காசுகளை கொண்டு பெருமாள் கூறியபடி அந்த காட்டை அழித்து அங்கு ஒரு ஆலயத்தை கட்டினர், ஆலயத்தை சுற்றி ஒரு ஊரையும் நிர்மானித்தனர். அந்த ஊருக்கு புத்தூர் என்று பெயரிட்டனர். வில்லியின் கனவில் தோன்றி பெருமாள் கூறியதால் காலப்போக்கில் இது வில்லிபுத்தூர் என்றும், அதற்கு பின் வந்தவர்கள் ஸ்ரீ என்னும் சிறப்பு பெயரை சூட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் என்று அழைக்கத்துவங்கினர்.