
மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வசிப்பவர் முருகப்பெருமான், ஒவ்வொரு குன்றின் மீதும் குமரன் இருப்பான் என்பது ஆன்றோர் வாக்கு, அமைதி நிலவும் இதுபோன்ற சூழ்நிலையில் முருகனை பக்தர்கள் மட்டும் வழிபடுவதில்லை, முனிவர்கள், ஞானிகள், யோகிகள் போன்றோரும் இதுபோன்ற மலைஸ்தலங்களில் தெய்வங்களை சூட்சம ரூபமாக வந்து தரிசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இலஞ்சி. இங்கே உள்ள முருகப்பெருமானின் திருநாமம் இலஞ்சிக்குமாரன். நீரும் தாமரையும் குடிகொண்டுள்ள தலம் எனும் பெருமை கொண்ட ஆலயம் இது. ரிஷிகளும் முனிவர்களும் இன்றைக்கும் சூட்சம ரூபமாக இங்கு வந்து, ஞானகுருவான முருகக் கடவுளை வழிபடுகிறார்கள் என ஐதீகம். எனவே, இங்கு வந்து கந்தனை தரிசித்தால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்! செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாள், சஷ்டி ஆகிய நாட்களில் இங்கு வந்து பிரார்த்தித்தால், திருமண யோகம் கைகூடும். தொழில் விருத்தியாகும். செல்வம் பெருகும்! /////// அஷ்டலட்சுமிகளுக்கு புடவை சாத்தி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும்... சென்னை அடையார் அருகில் உள்ளது பெசன்ட்நகர். கடற்கரையை ஒட்டிய பகுதியில், அழகுற அமைந்துள்ளது ஸ்ரீஅஷ்டலக்ஷ்மி ஆலயம். ஸ்ரீமகாவிஷ்ணுவும் ஸ்ரீமகாலக்ஷ்மியும் மூலவர்களாக இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் இது! மேலும், ஸ்ரீஆதிலக்ஷ்மி,ஸ்ரீ தான்யலக்ஷ்மி, ஸ்ரீதைரிய லக்ஷ்மி, ஸ்ரீகஜலக்ஷ்மி, ஸ்ரீசந்தானலக்ஷ்மி, ஸ்ரீவிஜயலக்ஷ்மி, ஸ்ரீவித்யாலக்ஷ்மி, ஸ்ரீதனலக்ஷ்மி என அஷ்டலக்ஷ்மியரும் ஓரிடத்தில் இருந்தபடி, அருளை வாரி வழங்குகின்றனர் இங்கே! ஸ்ரீமகாலக்ஷ்மியை வணக்கினால் மங்கலகரமான வாழ்க்கை அமையும் என்கின்றனர் பக்தர்கள். உடல்நலம்பெற ஸ்ரீஆதிலக்ஷ்மியையும், பசிப்பிணி நீங்க ஸ்ரீதான்யலக்ஷ்மியையும், மனதில் தைரியம் பெற ஸ்ரீதைரியலக்ஷ்மியையும், சௌபாக்கியம் பெற ஸ்ரீகஜலக்ஷ்மியையும், குழந்தைவரம் வேண்டுவோர் ஸ்ரீசந்தானலக்ஷ்மியையும் காரியத்தில் வெற்றி கிடைக்க ஸ்ரீவிஜயலக்ஷ்மியையும் கல்வியும் ஞானமும் பெற ஸ்ரீவித்யாலட்சுமியையும், சகல ஐஸ்வரியங்களும் பெருக ஸ்ரீதனலக்ஷ்மியையும் வணங்கி, பலன் பெறலாம் இந்தத் தலத்தில்! தேவியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புடவை சார்த்தி வணங்கினால் வீட்டில் சுபிட்சம் நிலவும்!