logo
home ஆன்மீகம் மே 16, 2016
காலின் பெருவிரலிலும் விபூதியை வைக்கலாம், விபூதியின் பயன்களும், அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும்
article image

நிறம்

விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும். இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும். ‎விபூதியை எப்படி பூசிக்கொள்வது‬? விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், உங்கள் உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி என்று சொன்னால், அது உங்கள் மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை நீங்கள் உங்கள் உடலில் இட்டுக்கொள்ள வேண்டிய இடங்கள், புருவமத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி. இவ்விடங்களில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதை காலம்காலமாக இந்தியாவில் அறிந்திருக்கிறார்கள். இவ்விடங்களில் விபூதி இட்டால், இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். ‎விபூதியின் பலன்கள்‬: 1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) – இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும். 2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) – இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும். 3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி): – வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும். 4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம். 5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம். பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com