logo
home ஆன்மீகம் ஜூன் 14, 2016
கோவிலில் எதற்கு பலிபீடம்? அமைதியும், ஆத்ம திருப்தியும் அடைய நீங்கள் பலியிட வேண்டிய முக்கியமானவைகள் பற்றிய அரிய தகவல்
article image

நிறம்

கோவிலில் பலி பீடம் ஏன்?
காமம்,  ஆசை,  குரோதம் (சினம்),  லோபம் (கடும்பற்று),  மோகம் (கற்பு நெறி பிறழ்வு),  பேராசை,  மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்), எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடமாக உருவகப்படுத்தவே கோவிலில் பலி பீடம் வைக்கப்பட்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும். மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும். மற்றவர்கள் நினைப்பது போல உயிர் பலி கொடுக்கப்படும் இடம் அல்ல பலிபீடம்.

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

கெட்ட குணத்தை எப்படி பலியிடுவது? 
மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

பலி பீடத்தின் அருகில் நின்று உள்ளம் உருகி “என்னிடம் உள்ள  காமம்,  ஆசை,  குரோதம் (சினம்),  லோபம் (கடும்பற்று),  மோகம் (கற்பு நெறி பிறழ்வு),  பேராசை,  மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்), எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்கிறேன். இவற்றை என்னுள் இருந்து அழித்துவிட்டு என்னிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் மேலும் வளர்க்க மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும், இப்படி ஒவ்வொரு முறையும் நாம் பலி பீடத்தின் முன் நின்றி மனதார இவ்வாறு கூறினால்,விரைவில் நமது மனதில் ஒருவித தெளிவு ஏற்படும்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது. (திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள். அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது. ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம்.

வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.



குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
  

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com