
மனித உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது காற்று, அந்த காற்றை முறையாக சுத்தமாக்கி, மனிதர்களுக்கு சத்துக்கள் நிறைந்த பரிசுத்தமான காற்றாக மாற்றி தருவதுடன், மழை, மண்வளம் போன்றவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது மரங்கள் மட்டுமே, மனித உயிர் மேம்பட்டு வாழ அவை வரம் தருவதால் அதற்கு தாவரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சில மரங்கள் மனித இனத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து மனித இனத்தை விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் எனவும் முன்னோர்கள் அழைத்தனர்.
இந்த தாவரங்களும், விருட்சங்களும் மனித நாகரிகத்திற்கு அதிகமாக தேவைப்பட்டதால், அவைகள் அழிக்கப்பட்ட காலத்தில்தான், அவை அழியாமல் காப்பாற்ற கோயில்களிலும், பூஜையிலும், தாவரங்களையும், விருட்சங்களையும் நமது முன்னோர்கள் புகுத்திவைத்துள்ளனர்.
அப்படி மனித இனத்திற்கு மிகவும் பயன்படும் ஒரு சில மரங்கள், மனித இனத்திற்கு மிகுந்த சக்தியையும் தரவல்லவையாக விளங்குகின்றன. அவை ஒரு சில கோயில்களில் தல விருட்சமாகவும் விளங்குகின்றன. அப்படிப்பட்ட,கோயில்களில் வளர்க்கப்படுகின்ற சில தெய்வீக விருட்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
கொன்றை மரம்:
சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
மகிழ மரம்:
இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்துவந்தால் அறிவின் வளர்ச்சி விருத்தியடையும் என்று சொல்வர்.
பன்னீர் மரம்:
இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்திவைத்தால், விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.
குறுந்த மரம்:
வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பும்ஸிக மரம்:
சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.
அரிசந்தன மரம்:
திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.
பரிசாதகம்:
அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.
மந்தாரக மரம்:
வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.
பின்னை மரம்:
திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
கருநெல்லி மரம்:
திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
செண்பக மரம்:
சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.
பிராய் மரம்:
மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள். ஆனால் இவை மனிதர்களால் மிக அசுர வேகத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக ஒரு மரம் மட்டுமே தற்போது உயிர்வாழ்கிறது. ஒரு சமயம் பிராய் மரங்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊருக்கு திருப்பராய்த்துறை என்ற பெயர் பெற்றிருந்தது.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்
www. aanmeegamalar.com
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com