மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி, ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கையில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்கின்றன புராணங்கள். விரதம் வரும் அன்றைய தினம் சிவபெருமானை வணங்கினால் கவலைகள் அனைத்தும் நீங்கும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய நான்கு கால பூஜைகளும், பூஜை செய்ய வேண்டிய பொருட்களும், வழிமுறைகளையும் பார்ப்போம். முதல் ஜாமப்பூஜை முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்; வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர், அபிஷேகம் - பஞ்சகவ்யம், அலங்காரம்- வில்வம், அர்ச்சனை - தாமரை, அலரி, நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல், பழம் - வில்வம், பட்டு - செம்பட்டு, தோத்திரம் - ரிக் வேதம், சிவபுராணம், மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம், புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை, ஒளி- புட்பதீபம். இரண்டாம் ஜாமப்பூஜை இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்; வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள், அபிஷேகம்-பஞ்சாமிர்தம் அலங்காரம் - குருந்தை, அர்ச்சனை - துளசி, நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல், பழம் - பலா, பட்டு - மஞ்சள் பட்டு, தோத்திரம் - யஜூர் வேதம் , கீர்த்தித் திருவகவல், மணம் - அகில், சந்தனம், புகை - சாம்பிராணி, குங்குமம், ஒளி- நட்சத்திரதீபம். மூன்றாம் ஜாமப்பூஜை மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்; வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர், அபிஷேகம் - தேன், பாலோதகம், அலங்காரம் - கிளுவை, விளா, அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர், நிவேதனம் - எள்அன்னம், பழம் - மாதுளம், பட்டு - வெண் பட்டு, தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி, மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம், புகை - மேகம், கருங் குங்கிலியம், ஒளி- ஐதுமுக தீபம். நான்காம் ஜாமப்பூஜை நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்; வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்), அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர், அலங்காரம் - கரு நொச்சி, அர்ச்சனை - நந்தியாவட்டை, நிவேதனம் - வெண்சாதம், பழம் - நானாவித பழங்கள், பட்டு - நீலப் பட்டு, தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல், மணம் - புணுகு சேர்ந்த சந்தணம், புகை - கர்ப்பூரம், இலவங்கம், ஒளி- மூன்று முக தீபம்.
நிறம்