logo
home ஆன்மீகம் ஏப்ரல் 21, 2016
பௌர்ணமி: எந்த மாதத்தில் எந்த விதத்தில் அம்மனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
article image

நிறம்

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும், ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பௌர்ணமி தினம் வரும். ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு. சித்திரை மாத பௌர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விசேஷம், வைகாசி பௌர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும், தங்க ஆபரணமும் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு. எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபட வேண்டும். இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம். வைகாசியில் விசாக நட்சத்திரத் துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். ஆனி மாதப் பௌர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம். ஆடி பௌர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பானது. அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும். இந்த பூஜையால் புண்ணிய கதி கிட்டும். ஆடி மாதத்தில் வடநாட்டில் வட சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம். ஆவணி பௌர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது. புரட்டாசி பௌர்ணமியன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாள ரத் தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும். மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது. நைவேத்தியம் & இளநீர். இந்த பூஜையின் பலனாக சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புரட்டாசி பௌர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது. ஐப்பசி பௌர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும். மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.கார்த்திகை மாத பௌர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், ருத்திராட்ச மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது. தை மாத பௌர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது. வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும். நைவேத்தியப் பொருள் பாயசம். ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை. தை மாதப் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாத பௌர்ணமி தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது. வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது. பங்குனி மாதத்தில் பௌர்ணமியன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம். தயிர் அபிஷேகம் சிறப்பானது. தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு&நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது. இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம். ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது. துன்பங்கள் தொலைய, துயரங்கள் நீங்க எம்மைப் பீடித்த தோஷங்கள் மறைய, வாழ்வில் நிம்மதி நிலைக்க, அன்னையை ஆசீர்வதிக்க சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதமிருந்து அம்மனையும் சித்திர புத்திரனாரையும் வழிபட்டு அருளும் நலமும் பெறுவோமாக. குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com