புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதார கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும். இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த- சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கெளரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங் களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி. மேலும், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம் வருவதும் இம்மாதத்தில்தான். ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள். புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும். புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்... ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும். துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும். மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும். அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும். ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும். சஷ்டி-லலிதா விரதம் - புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும். கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும். எனவே நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாக்ஷத்தினைப் பெறுவோம்.
நிறம்