logo
home ஆன்மீகம் அக்டோபர் 26, 2019
பலவிதமாக கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையும், தீபாவளிபற்றிய அறிய தகவல்களும்
article image

நிறம்

வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு கர்மாவிற்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. அப்படி குறிப்பிட்ட கர்மாவில் மனிதன் இருந்தாலும், இறைத் தொடர்பு, நல்ல செய்கை, நல்ல எண்ணங்கள் போன்றவற்றை மறக்காமல், எந்த மனிதன் தனது கர்மாவை பூர்த்தி செய்கிறானோ அவன் தெய்வத்திற்கு சமம். கர்மா என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், வசதி வாய்ப்பு, ஏழ்மை, பசி, பட்டினி இப்படி எதுவேண்டுமானாலும் ஒரு மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மாவாக இருக்கலாம். ஒவ்வொரு கர்மாவிற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. வறுமை, பசி, பட்டினி போன்றவற்றில் உழன்றாலும், தெய்வ பக்தி, நேர்மை, நல்ல எண்ணம், போன்றவை உள்ள மனிதன் தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவான். பொன்,பொருள், வசதி, வாய்ப்பு ஏனையவை அதிகம் இருந்தும் நல்ல எண்ணமும், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை இன்றி, இன்னும் பொன் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தால் அவன் சாத்தானைவிட கொடூரமானவனாக கருதப்படுவான். இறக்கும் போது அவன் சேர்த்த சொத்து அவனைக் காப்பாப்பாற்றாது. ஆனால் அவன் செய்த நல்லசெயல்கள் அவனுடன் துணைக்கு செல்லும், இதை உணர்த்ததான் புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறி நூல்கள் போன்றவை இந்து சமயத்தில் படைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இது போன்ற புராணங்கள் கூறும் கருத்தை மக்கள் மறக்காமல் இருக்கவே வருடம் தோறும் ஏதோ ஒருவிதத்தில், ஒரு பண்டிகையின் வடிவில் இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்துக்களின் பண்டிகைகளில் மிக உயர்ந்த பண்டிகைதான் தீபத் திருநாள் தீபாவளிப் பண்டிகை.
இந்தப் பண்டிகையின் முக்கிய நோக்கமே அகத்திலும், புறத்திலும் உள்ள கெட்ட எண்ணங்களை விட்டு விட்டு, தூய்மையான எண்ணத்துடன் மனித மனம் புத்தொளி பெற வேண்டும் என்பதே. இதை உணர்த்தவே அரக்கர்களை, தெய்வங்கள் கொன்று உலகில் நீதியை நிலைநாட்டுவதாக இதிகாச புராணங்கள் எடுத்துக் கூறுகிறது.
மேலும் இந்தப் பண்டிகையை கொண்டாட ஒருசில விரதமுறையும், மரண பயத்தைப் போக்கவும், நரகலோகத்திற்கு செல்லாமல் இருக்கவும் முன்னோர்களால் தீபாவளிப் பண்டிகைக்கென்றே சிறப்பு விரதமுறைகள் கையாளப்பட்டிருந்தது.
அதாவது துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவி யும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடை களில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும் (தீபாவளி லேகியம் பற்றியும், அதை தயாரிக்கும் முறைபற்றியும் பக்கம் 23ல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது), இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.
இரண்டு வகையான தீபாவளி: கெடுதல் அழிந்து நன்மை பிறந்த கதையாக இருந்தாலும், வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இந்த தீபாவளியை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
தென் இந்திய மக்கள் தீபாவளி கொண்டாட காரணம் நரகாசுரன்: தென் இந்தியாவில் இந்த தீபாவளிப் பண்டிகையை நரகாசுரனை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராவணை மையமாக வைத்து கொண்டாடும் தீபாவளி: தென் இந்தியாவில் நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படும் பண்டியாக தீபாவளி விளங்கினாலும் வடமாநிலங்களில் ராவணனை மையமாக வைத்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சீதாப்பிராட்டியை கடத்திச் சென்ற ராவணனை வதம் செய்துவிட்டு மிதுலைக்கு வந்த ராமரின் வெற்றியை கொண்டாடும் விதமாக வட மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. வால்மிகி ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதிசய தீபாவளி: தீபாவளிப் பண்டிகையை இந்து சமயத்தைச் சார்ந்த பல்வேறு மதங்களான, சமண, சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.
சீக்கியர்களின் தீபாவளி: 1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .
சமணர்களின் தீபாவளி: சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
தீபாவளி பண்டிகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை வாசம் செய்யும் நாள்: தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொரு வர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி எடுக்கப்பட்ட எண்ணையை தேய்த்து தான் குளிக்க வேண்டும். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதி காலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாககருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம்” என்று கூறுகிறார்கள். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம்.
எனவே இந்த தீபாவளித்திருநாளின் சிறப்புகளை அறிந்து நாமும் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கொண்டாடி இறையருளை பெற்று உடல் அளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் வாழ்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.