logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
பசுவின் உடலில் பால் இருந்தாலும், மடியின் மூலமே பெற முடியும். அதேபோல் கடவுள் அருளைப் பெற கோவிலே சிறந்தது.
article image

நிறம்

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதி உதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன் நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவளாகப் போற்றப்படுவர்.

ஒருவருடைய வயது, செல்வ நிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக் கூடாதவை.

தெரியாத ஒருவனுக்கு ஒன்றை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால் நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்கு பிரம்ம தேவனாலும் முடியாது.

தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்தியமம். சகோதரனு டைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானது.

முதுமைக்கு வேண்டியதை இளமையிலிருந்தே தேடுவது போல மறுபிறவிக்கு வேண்டிய நன்மை களை இப்பிறவியிலேயே தேட வேண்டும்.

என் வயலுக்கு மட்டும் மழை பொழியவேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள் பெறும் வழியாகும்.

போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகி றதோ அன்று இன்பமாளிகையின் முற்றத்தை நீ அடைந்துவிட்டதாக உணரலாம்.

உடல் அழுக்கை நீராடுவதால் போக்குவது போல மனஅழுக்கை வழிபட்டால் போக்க வேண்டும்.

இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம், பாவம் என்னும் இருவித துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.

உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக் கூடும்.

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல் கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.

எது தர்மத்தில் செலவழிந்ததோ அந்த செல்வமே நம்முடையதாகும். எந்த நேரத்தில் கடவுளின் திருநாமத்தை நினைக்கிறோமோ அதுவே நம்முடைய நேரம்.

யாசித்து நெய்யும் பாலும் தயிரும் சேர்ந்த அன்னத்தை உண்பதைவிட உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறந்ததாகும்.

அன்பு, அடக்கம், சாந்தம், பொறுமை, ஞானம் இக் குணங்கள் எல்லாம் மேலான சத்வகுணங்கள். இக்குணங்கள் ஒருவரிடத்தில் மேலோங்கினால் மனிதநிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயர முடியும்.

கல்வி பயிலுதல், தானம் செய்தல், உடல் நலம் பேணுதல் மூன்றையும் ஒவ்வொருவரும் பெற முயற்சி செய்தல் அவசியம்.

விவேகம் உடையவன் பண்டிதன். மனத்தூய்மை உள்ளவன் சுத்தன். துன்மார்க்கத்தில் மனதை போகவிடாமல் அடக்குகிறவன் வீரன். பெண்களின் அழகில் வஞ்சிக்கப்படாதவன் சமர்த்தன்.

பலபேர் கூடி கையெழுத்திட்ட விண்ணபத்தைக் கண்டு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பர். அதுபோல பலபேர் கூடி முறையிடும் கூட்டு பிரார்த்தனை செய்தால் ஆண்டவன் என்னும் அதி காரியும் உடனே நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவார்.

பெரியோர்கள் தங்களின் அறிவுரைகளாலும் உபதேசங்களிலும் நமக்கு நல்வழி காட்டுகிறார்கள்.

வயலில் என்ன விதைக்கிறோமோ அதுவே விளையும். அதுபோல் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும்.

கருணைக் கொண்டு நல்லவர்களுக்கு மட்டுமே உதவிட வேண்டும். தீயவர்களுக்கு கருணைக் காட்டுவது தீங்கில்தான் முடியும். பசுவுக்கு புல் கொடுத்தால் பால் கிடைக்கும். பாம்புக்கு பால் வார்த்தால் நஞ்சுதான் சிடைக்கும்.

எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக பூவினாலும், நீரினாலும் வழிபாடு செய்தாலே போதும். அன்பும் ஒழுக்கமும் மட்டும்தான் ஆண்டவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களாகும்.

பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தாலும், மடியின் மூலமாக பால் வெளிப்படுவது போல், எங்கும் இறையருள் நிறைந்திருந்தாலும் கோயிலில் இருக்கும் தெய்வங்கள் வாயிலாக திருவருளைப் பெறுகிறோம்.

இந்த உடம்பு அவன் தந்தது. கதிர், நிலவு, தீ, காற்று, நிலம், நீர் அத்தனையும் அவனருளாளே நாம் அனு பவித்து வாழ்கிறோம். அதனால் இறை வணக்கம் செய்யாதவன் மனிதனாய் பிறந்தும் கடமை மறந்த பாவத்தினால் மறுபிறப்பில் பெருந்துன்பம் அடைகிறான்.