பௌர்ணமியில்... பூமியும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கோட்டிற்கு வரும்போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் நேரடியாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருக்கும். பூரண சந்திரனின் போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தி மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். அன்று அலைகள் அதிகமாக உயரும். தண்ணீர் வழிந்தோடி துள்ளிக்குதிக்கும். இதேபோல உங்களுடைய ரத்தமும் உயரமாகத் துள்ளிக் குதிக்க முயற்சிக்கிறது. அந்த நிலையில் மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. அப்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும். மனநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகமாகும். அதே எப்போதும் அமைதியானவராக இருப்பவர்கள் இந்த நாளில் மேலும் அமைதியானவராக மாறிவிடுவார்கள். நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால் அன்று உங்கள் மகிழ்ச்சி மேலும் அதிகமாகும். உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அப்படியே உயரச் செல்லும். நீங்கள் அனைவரிடமும் அன்புடன் இருப்பவர் என்றால், பௌர்ணமி அன்று உங்களுடைய அன்பு கரைபுரண்டு ஓடும். சந்திரன் வெளியிடும் ஒளியும், மென்மையான அதிர்வும் அதன் விளைவாக எல்லாப் பொருட்கள் மீதும் ஒரு புதிய மணம் வீசும். ஒவ்வொரு பொருளும் ஒரு புதிய ஒளியுடன் இருக்கும். சந்திரன் முழு நிலவாக இருக்கும்போது வெளியிடும் அதிர்வும் ஒளியும் மற்ற நாட்களை விட, மற்ற நிலைகளைவிட வித்தியாசமாக இருக்கும். அதேபோல் அதன் காந்தசக்தியும் வேறுபடும். உங்கள் உடல் உள்ளே செயல்படும் ஈடா மற்றும் பிங்களா ஆகிய இரண்டு சக்திகளும் வேறு விதமாக வேலை செய்யும். பிராண சக்தியின் ஓட்டமும் வேறுவிதமாக இருக்கும். உங்கள் இரத்த ஓட்டமும் சற்று வேறுவிதமாக இருக்கும். உங்களுடைய முழு சக்தியும் வேறுவிதமாக செயல்படும். அதற்குக் காரணம் அதிர்வுகளும் மாறி விடுவதால்தான். அமாவாசையில்... சரி, அமாவாசை அன்று எப்படி இருக்கும்? பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் என்ன வேறுபாடு? தியானத்தின் தரம் பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் பெருத்த வேறுபாடுடன் இருக்கும். தொடர்ந்து தியானம் செய்பவருக்கு பௌர்ணமி நல்லது. சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அமாவாசை இரவன்று உங்களுடைய சக்திகள் முரட்டுத்தனமாக இருக்கும். மதம்பிடித்த யானைபோல உங்களுடைய சக்தி தறிகெட்டுப்போகும். அதனால்தான் அமாவாசை இரவுகளை தாந்திரீகர்கள் பயன்படுத்துவார்கள். அப்போது சக்திகள் மேலும் அதிகமாகும். பௌர்ணமி இரவுகளில் உங்கள் சக்தி சற்று அடங்கி இருக்கும். அடக்கமாகவும், இனிமையாகவும், அழகாகவும் இருக்கும் - காதலைப்போல. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சொல்லவேண்டும் என்றால், அமாவாசை என்பது பாலுணர்வு சார்ந்ததாகவும், பௌர்ணமி என்பது காதல் தொடர்புடையதாகவும் சொல்ல முடியும். அமாவாசை சற்று கரடுமுரடானது, ஆனால் சக்தி மிகுந்தது. பௌர்ணமி மென்மையான தன்மை படைத்தது. அதன் சக்தியை உங்களால் உணரமுடியாது. அந்த அளவுக்கு நுட்பமானது. குண்டலினியின் செயல்பாடும் அதேபோல்தான் இருக்கும். பௌர்ணமி தினத்தில் அது மெதுவாகவும் மென்மையாகவும் நகரும். அமாவாசை தினத்தில் அது வேகமாகவும் துள்ளிக்குதித்தும் நகரும்.
நிறம்