logo
home மருத்துவம் ஏப்ரல் 01, 2016
மனபலமும், உடல் நலத்தையும் தரும் முக்கியமான 5 தியான வகைகள்
article image

நிறம்

இன்றைய பொருளாதார உலகில் பொன், பெண், மண் போன்றவற்றிற்காக மட்டும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஏதோ ஒரு வெறுமை வாழ்க்கையில் தன்னால் தோன்றிவிடுகிறது. வாழ்க்கையில் தோன்றும் இது போன்ற வெறுமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தை தேட ஒதுக்கும் நேரத்தில் ஒரு சில துளிகளை நமது மனத்திற்காகவும் ஒதுக்கினால் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும். அந்த ஒரு துளியை தியானம் யோகம் போன்றவற்றிற்கு செலவழித்தால் வாழ்க்கையில் புத்துணர்ச்சி கிடைக்கும். நம் மனமாகிய குரங்கை வெளியே இறக்கி வைத்து, வெளியில் இருந்து தன்னை பார்க்கும் தியான முறையைப் பற்றி பல்வேறு சித்தர்கள் பல்வேறு சமயங்களில் பல வகையில் கூறியுள்ளனர். அதில் முக்கியமாக 5 வகை தியான முறைகள் மிகவும் முக்கியமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த தியான முறையை, குரு மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட ஒரு ஐந்து தியான முறைகளைப் பற்றி பார்ப்போமா. கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி. இதுதான் அந்த தியான முறைகளின் பெயர். 1. கேசரி: யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது. 2. பூசரி: இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 3. மத்திய லட்சணம்: இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 4. ஷண்முகீ: இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும். 5. சாம்பவி: சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும். இந்த முறை தியானங்கள் மனித மனதிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் மிகுந்த பயன் தரக்கூடியதாக அமையும்.