logo
home ஆன்மீகம் மார்ச் 02, 2019
மகா சிவராத்திரியில் அவசியம் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்
article image

நிறம்

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது... உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். மேலும், உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான். (உடல் அளவில் ஒருசில பிரச்சனைகள் இருப்பவர்கள்மட்டும் உணவு கட்டுப்பாடு தேவையில்லை.) மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு? மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம். இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை. சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.