logo
home ஆன்மீகம் மே 05, 2019
அக்னி தேவன் பசியாறும் 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர நாட்கள்
article image

நிறம்

அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். நம்மை வாழவைக்கும் மந்திரத் தொகுதிகளான வேதங்களோ அக்னியைப் பற்றி ஆற்றலுடைய பல தகவல்களைத் தருகின்றன. அக்னி தேவன் என்பவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் என்றும், சூரியனின் கதிர்களிலிருந்து பிறப்பெடுத்தவன் என்றும் பதினெண் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அக்னி புராணம், மனிதர்களின் வாழ்க்கை முறையை சொல்வதற்கென்றே தவசிகளாலும் முனிவர்களாலும் எழுதப்பட்டது என்று சொல்லலாம். - ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைப்பது ஏன் என்பதை ஒரு புராணக்கதை மூலம் தெரிந்துகொள்வோம். ஒரு காலத்தில் தீராத வயிற்றுப் பசியால் அக்னி தேவன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட பசிக்குக் காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள். இறுதியாக சுவேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகள் நடத்திய யாகம் தான் காரணம் என்றும் அவர் யாகத் தீயில் இட்டுக்கொண்டிருந்த நெய்தான் அக்னி தேவனின் வயிற்றில் பசியை உண்டாக்கிவிட்டது என்றும் அறிந்தனர். இதைப் போக்குவதற்கான வழி என்னவென்று பிரம்மாவிடம் கேட்கப்பட்டது. கோரமான பசியும் வயிற்று வலியும் தீர வேண்டுமானால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும் என்றார் பிரம்மா. உடனே காட்டைத் தேடி ஓடினார் அக்னி பகவான். எல்லா இடங்களிலும் தேடியவர், யமுனை நதிக்கரை ஓரமாக இருந்த, மலர்கள் பூத்துக் குலுங்கிய காண்டவ வனத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து நெருங்கினார். அதே சமயத்தில் கானகத்தை விழுங்க நெருங்கிய அக்னிக்கு ஒரு சோதனை வந்தது. இக்காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த இந்திரன், கானகத்தைச் சுற்றி அடர் மழையைப் பெய்யும்படி செய்தான். அக்னி தேவன் பல வடிவங்களை எடுத்து கானகத்தை விழுங்க முயற்சி செய்தபோதும் தோல்வி அடைந்தார். இறுதியாக ஒரு முதியவர் வேடம் தரித்து யமுனை நதிக்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு எதிரே கிருஷ்ணரும் அர்ஜூனனும் வந்தார்கள். முதியவர் வடிவில் வந்த அக்னி பகவான் தான் மிகவும் பசியோடு இருப்பதாகக் கூறி கிருஷ்ணனிடம் உணவு கேட்டார். கிருஷ்ண பகவான், வந்தது யாரென்று புரிந்துகொண்டு, அக்னி தேவனின் பசியைத் தீர்க்கும் உணவைத் தருகிறேன் என்று கூறியபோது அக்னி தேவன் தனது சுய உருவத்தைக் காட்டினார். அங்கே காண்டவ வனமே தான் சாப்பிட்டுப் பசியாற வேண்டிய பொருள் என்று கூறினார். - இந்திரன் ஏற்படுத்திய தடை குறித்தும் புகார் சொன்னார். அதற்கு கிருஷ்ண பரமாத்மா, காண்டவ வனத்தை உண்பதற்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். அத்துடன் ஒரு நிபந்தனையையும் இட்டார் கிருஷ்ணர். அதற்கு காலவரம்பாக 21 நாட்களை வரையறுத்தார். பின்னர் அர்ஜூனனைப் பார்த்து, அக்னிதேவனுக்கு பாதுகாப்பு தரும்படி உத்தரவிட்டார். - தன் வில்லை வளைத்த அர்ஜூனன் ஆயிரக்கணக்கான அம்புகளால் கூடாரத்தை உருவாக்கினான். கிருஷ்ணரின் பாதுகாப்பில், தனது ஏழு நாக்குகளையும் நீட்டியபடி வனத்துக்குள் புகுந்து கிடைத்த உணவு அத்தனையையும் அக்னி தேவன் விழுங்கத்தொடங்கினார். இதைக் கண்ட இந்திரன் பெரும் மழையைப் பெய்வித்தார். அந்த சமயத்தில் துளி மழை கூட அக்னியின் மேல் படாமல் அர்ஜூனனின் அம்புக் கூரை காத்து நின்றது. - அக்னி பகவான் முதல் ஏழு நாட்கள் பூமியின் கீழ்ப்பகுதியை உண்டார். அந்த சமயம் வெப்பம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்கள் வளர்ந்திருந்த அடர்காட்டை உட்கொண்டார். அந்த நேரத்தில் வெப்பம் கடுமையாகப் பரவி சுடத் தொடங்கியது. இறுதியாக ஏழு நாட்கள் பாறைகளை விழுங்கியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து முழுமையாகத் தாழ்ந்து இளம் வெயில் மட்டும் வரத் தொடங்கியது. இப்படியாக அக்னி பகவான் காண்டவ வனத்தை விழுங்கிய 21 நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று சொல்லப்படுகின்றன. கத்திரி வெயில் என்று சொல்லப்படுகின்ற இந்த வெயில், 21 நாட்களிலும் மூன்று வகையாகப் பரவும். முதல் ஏழு தினங்களில் மெதுவாக அதன் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம். கோடைக் காலத்தின் உச்சகட்டமான நேரங்கள் தான் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில். - சூரியனின் ஆதிக்கம்: பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட ரீதியில் காணும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார். இதன்படி தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்துவிடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை மாதம் 21-ம் தேதி தொடங்கி, வைகாசி 14-ம் நாள் முடிவடைகிறது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி இப்போது நடந்துவருகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் சுபசெயல்களைச் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சில சுபசெயல்களை நடத்தலாம் என்கின்றன நட்சத்திரங்கள். திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றைச் செய்யலாம். ஆனால் வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவை வேண்டாம். அக்னி நட்சத்திரத்துக்கு முன்னர் தொடங்கிய பணிகளை இக்காலகட்டத்தில் செய்யலாம். புதிய வாகனங்கள் பயிற்சி, குருவிடம் தீட்சை ஆகியவற்றை இக்காலகட்டத்தில் செய்ய வேண்டாம். - திருமஞ்சன வழிபாடு: கிராமப்புறங்களில் முன் ஏழு, பின் ஏழு நாட்களில் மக்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். சிவ, விஷ்ணு ஆலயங்களில் இந்த 21 நாட்களும் பல்வேறு திருமஞ்சன நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அம்மன் சன்னிதானத்தில் வசந்த நவராத்திரி உற்சவம் என்று ஒன்பது தினங்களுக்குக் கொண்டாடுவார்கள். சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் மண் பானை ஒன்றை உறி போல் கட்டிவிட்டு அதில் வெட்டி வேர் போன்ற வாசனைத் திரவியங்களைப் போட்டு அதன் அடியில் சிறு துளை இட்டு நீர் விடும் கலசமாகத் தொங்கவிடுவார்கள். - அந்தப் பானைக்குள் பச்சிலை, ஜடாமஞ்சி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பச்சைக் கற்பூரம், பன்னீர், மஞ்சள் தூள், ஏலக்காய், கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைச் சிறிதளவு கலந்துபோட்டு நீர் வெண்ணிறம் மாறாமல் இடுவார்கள். அக்னி நட்சத்திர நாட்களில் பல்வேறு அபிஷேகங்களை செய்வார்கள். விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறும். அக்னி வழிபாடு: அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள் இருப்பதால் ஏழு தினங்கள் முறையான வழிபாடு செய்யலாம். இந்த தினங்களில் அக்னி தேவனின் கோலத்தைப் பூஜையறையில் செங்காவியால் வரைந்து வாசனை மலர்களால் பூஜை செய்து தீபம் ஏற்றிவைத்து ஞாயிறு பாயசம், திங்கள் பால், செவ்வாய் தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி - வெள்ளை சர்க்கரை பானகம், சனி- பசு நெய் மற்றும் தயிர் அன்னம் என்ற வரிசையில் படைத்து அக்னி தேவனை தியானம் செய்து வழிபட வேண்டும். மனிதனின் இரு உள்ளங்கைகளிலும் அக்னி தேவன் இருப்பதாக நம்பிக்கை உண்டு. அதனால்தான் இரு கைகளையும் காட்டி ஆலய வழிபாடு செய்கிறோம். வெப்ப காலத்தில் இஷ்ட, குல தெய்வங்களை வழிபட்டு வரலாம். அனைத்து ஆலயங்களிலும் ஜலதாரை வைப்பதால் அந்தக் காலகட்டங்களில் பூமி அதிர்வோ இயற்கை உபாதைகளோ ஏற்படாது என்பது ஆன்றோர் கருத்து.