பிப்ரவரி 5 ம் தேதி பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறுகிறது ஸ்ரீவிமான உச்சியில் இருக்கும் கலசம் இறக்கப்பட்டது. அதில் இருந்த பழைய தானியங்களை நீக்கி, புதுத் தானியங்களை நிரப்பி, தங்கமுலாம் பூசி மீண்டும் ஸ்ரீவிமானத்தில் ஏற்றப்பட்டது. இந்தக் கலசம் எப்போ, யாரால் வைக்கப்பட்டது.? இதற்குமுன் குடமுழுக்கு நடைபெற்றது எப்போது.? பேரரசன் இராஜராஜன் தஞ்சை பெரியகோவிலை கட்டுமானம் செய்து, தன்னுடைய 25 ம் ஆட்சியாண்டில் குடமுழுக்கு செய்தார். அதாவது கி.பி. 1010 ல் முதன் முதலாக பெரியகோவில் குடமுழுக்கு இராஜராஜனால் நடத்தப்பட்டது.பெரியகோவில் கல்வெட்டு .."இராஜராஜன் தனது 25 ம் ஆட்சியாண்டு 275 ம் நாளில், இராஜராஜனே ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் விமானக் கலசத்திற்கு மூவாயிரத்து எண்பத்துமூன்று பலம் உள்ள செப்புக்குடம் அதன் மேல் பூச இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தாரறைக் கழஞ்சு பொன்னும் அளித்து..."இந்தக் கல்வெட்டின் மூலம் கி.பி. 1010 ல் முதன் முதலாய் பெரியகோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.. அதன்பிறகு எப்போ குடமுழுக்கு நடந்தது பற்றிய தகவல் , சரபோஜி மன்னர்கள் காலத்தில்தான் கிடைக்கின்றன.. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது சரபோஜிகள் காலத்தில் இரண்டு முறை குடமுழுக்கு நடைபெற்றது.. சரசுவதிமகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் மூலமும், கலசத்தில் உள்ள எழுத்துப்பொறிப்பு மூலமும் அறியப்படுகிறது.சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளில் தஞ்சை பெரியகோவில் குடமுழுக்குப்பற்றிய செய்திகள் உள்ளன.பெரியகோவில் கும்பாபிசேகம் என்ற குறிப்புடன் அந்த சுவடி உள்ளது.சுவடியின் முதல் பக்கம்.. "சுபஸ்ரீ நிருப சாலியவாகன சகம் 1765 - கலியுகாப்தம் 4944 தியின் மேல்ச் செல்லாநின்ற சோபகிருது வரு ஆவணி மீ 24 சுக்குல பட்சம் சதுற்தேசி குருவாரத்தில் சாலியவாகனம் 1651 சௌமிய வருசீரணோத்ரம் செய்திருக்கிற சத்ரியகுல பூஷண போசலவ முசோற்பவனன் சரபோசி மகாராசவினுடைய பேரனுக்கு பேரனாகிய சோஷ சிம்மாசனாதிபதி ஸ்ரீமந்தஸ்ரீசிவாசிந்திர சத்ரபதிசா "சுவடியின் மறுபக்கம்." யகேபு அவர்கள் ஸ்ரீபிரகதீசுவர சுவாமிக்கி சிகரப் பிரதி ஷசை அஷ்ட்ட பந்தனம் முதலான சீரணோத்ரம் கும்பாபிஷேகமும் செய்தார்கள். - விசாலாட்சி அம்மன் பாதமே துணை. இந்த ஓலைச்சுவடியின் செய்திகள் மூலம்..முதலாம் சரபோஜியின் காலத்தில் சகம் 1651 ( கி.பி. 1729) லும்...சிவாஜிந்தர சத்ரபதி அவர்களால் சகம் 1765 ( கி.பி. 1843) லும்.தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இதே செய்தி கோபுர கலச பீடத்திலும் தமிழ், கிரந்தம், மராட்டி மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.முதலாம் சரபோஜி காலத்தில் 1729 ல் நடைபெற்ற குடமுழுக்கின் கலசம் ஒன்று புதிதாக செய்யப்பட்டு விமான உச்சியில் வைக்கப்பட்டது. இக்கலசமே தற்போது இறக்கப்பட்டது. இக்கலசத்தில், ராசா சரபோசி மகாராசா உபையம் என பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 1843 ல் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்விலும் இக்கலசமே புதுப்பிக்கப்பட்டு பயன்பட்டது. அப்போது பொறிக்கப்பட்ட வாசகம்," சுபஸ்ரீ நிருப சாலியவாகன சகம் 1765 - கலியுகாப்தம் 4944 தியின் மேல்ச் செல்லாநின்ற சோபகிருது வரு ஆவணி மீ 24 சுக்குல பட்சம் சதுற்தேசி குருவாரத்தில் சாலியவாகனம் 1651 சௌமிய வருசீரணோத்ரம் செய்திருக்கிற சத்ரியகுல பூஷண போசலவ முசோற்பவனன் சரபோசி மகாராசவினுடைய பேரனுக்கு பேரனாகிய ஸ்ரீமத் சோள சிம்மாசனாதிபதி ஸ்ரீமது ராஜஸ்ரீசிவாஜீந்திர மகாராஜா சத்ரபதிசாகேபு அவர்கள் ஸ்ரீ சுவாமிக்கு சிகரப் பிரதி ஷ்டை அஷ்ட்ட பந்தனம் முதலான ஜீர்ணோத்ரம் கும்பாபிஷேகம் சைதார்" இதன் பிறகு குடமுழுக்கு 1997 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 2020 பிப்ரவரி 5 குடமுழுக்கு நடைபெறுகிறது.
நிறம்