பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது, கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற விதி இருந்த போதும், கொரா போன்ற பெருந்தொற்று நோய் காரணமாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் 4 வருடங்கள் தள்ளிப்போட்டு 16 வருடங்களுக்குப் பின் 2023ம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது.
கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜை, 2023ம் கும்பாபிஷேகத்தில் சுருக்கப்பட்டு 3 நாட்களில் மண்டல பூஜை நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தை கிருத்திகை, தை பூசம் போன்ற மிகப்பெரிய நிகழ்வுகள் நடைபெறுவதால் பல லட்சம் பக்தர்கள் பழனிக்கு வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஜனவரி27 ந்தேதி வெள்ளி கிழமை காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 26 ந்தேதி படியில் இருந்து மலைவரை உள்ள சிறிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரம் மற்றும் தங்க விமனகோபுரத்தில் தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என தமிழ் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது. கங்கை, காவிரி, சண்முக நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன.
குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 4ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கபட்டு இருந்தனர்.
இந்நிலையில் தைப்பூச விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவிருப்பதால் உலககெங்கிலுமிருந்து பழனிக்கு பக்தர்கள் கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
மேலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்களில் பழனி முருகனை தரிசித்தால் பலன் அதிகம் என்ற எண்ணத்தில், பழனிக்கு வரும் பக்தர்களும், தைப்பூச நாளை தேர்வு செய்து பழனியை நோக்கி வருவார்கள் என கூறப்படுகிறது.
அரசு சார்பிலும், கோவில் நிர்வாகம் சார்பிலும் இன்னும் அதிகப்படியான வசதிகளை பக்தர்களுக்கு செய்து தரவேண்டும் என்றும், முருகன்மீது பிரியமுள்ள வசதி படைத்தவர்கள், தானாக முன்வந்து பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தங்களால் முடிந்த சேவைகளை செய்யவேண்டும் என்றும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஆன்மிக சேவை....
இந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் குழந்தைவேலப்பர் சன்னதி அருகே "நியூ K.T. மஹால்" என்ற திருமண மண்டபத்தில் ‘பழநி முருகன் அன்னதான குடில்’ அமைத்து திண்டுக்கல்லில் பிப் 1ம் தேதி மாலை 750 பேருக்கு சிற்றுண்டி வழங்குவதிலிருந்த தங்களது சேவையை துவங்க உள்ளனர். அன்னதானம் மட்டுமல்லாது பாதயாத்திரை வரும் பக்தர்களில் 5 ஆயிரம் பேருக்கு, பழம் பிஸ்கட் தண்ணீர் என ஒரு பையில் வைத்து வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பின் சார்பில் மணிவண்ணன் (9944399719) அவர்கள் தெரிவித்தார்.
இதுபோன்று இன்னும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பழனியில் சேவையாற்ற குவிந்தும் வருகின்றனர். வசதி வாய்ப்பு உள்ளவர்களும், தங்களால் முடிந்த அளவு, பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பல்வேறு ஆதினங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழனி கும்பாபிஷேகம், தைப்பூச சிறப்பிதழ் வெளியீடு...
நமது ஆன்மிகமலர் டிரஸ்ட் சார்பில், பழனி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச சிறப்பு இதழ் தயாரிக்கப்பட்டு 48 பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டு பழனி கும்பாபிஷேக தினத்தில் வெளியிடப்பட்டது.
நமது இதழை மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் சார்பில் வெளியிடப்பட்டபோது, நமது ஆன்மிகமலர்.காம் இணையதளத்தின் சேவையை வெகுவாக பாராட்டினார், மேலும் “பழனி கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை, ஆனால் ‘ஆன்மிகமலர் .காம் பழனிகும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச சிறப்பிதழ்’ பழனி முருகனை தரிசித்ததைப் போன்று உணர்வு ஏற்பட்டது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மானாமதுரையில்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு பகுதியில் உள்ள தண்ணீரை பாலாகமாற்றிய ஶ்ரீசெல்வமுருகன் கோவிலில் ஆன்மிக மலர்.காம் சிறப்பு மலர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கோவில் ஸ்தாபகர் ஆன்மிக வள்ளல் ஏஆர்பிமுருகேசன் வெளியிட ஆனந்த வல்லிசோமநாதர் கோவில் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் தொழில் அதிபர் நடராஜன், ஸ்தபதிசண்முகம், வர்த்தக சங்க தலைவர் பாலகுருசாமி, வைகைகரை அய்யனார் கோவில் அறங்காவலர் காளீஸ்வரன், ஆகியோர் பெற்று கொண்டனர். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் தனசேகரன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் முல்லை சின்னசாமி ஓய்வு பெற்ற வீஏஓ சமயமுத்து, அரிமாசங்கநிர்வாகி சஞ்சய், நகர்மன்றகவுன்சிலர் புருஷோத்தமன், அகமுடையார் சங்க பொருப்பாளர் சாந்தி முருகன், மற்றும் ரெங்கராஜன்,மகாலிங்கம் கால்பிரவு கிராம பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பழனிதண்டாயுதபாணி கும்பாபிஷேகம் தைபூசம் சிறப்பு மலர் புத்தகம் வழங்கப்பட்டது. மானாமதுரை ஜோதிடர் சரவணன் நன்றி கூறினார்.
சிறப்பு மலர்வெளியிட்ட ஆன்மிக மலர். காம் இணையதளத்திற்கு ஏராளமான ஆன்மிக அடியார்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தைபூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
2023ம் ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் 29.01.2023 (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன இன்று பழனி ஊர் கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
மறுநாள் 4-ந்தேதி சனிக்கிழமை தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.