logo
home தத்துவம் ஜனவரி 24, 2016
அன்புக்கடலில் எல்லாம் கரைந்துவிடுகின்றன: சுவாமி விவேகானந்தர்
article image

நிறம்

மனைவி கணவனை நேசிக்கிறாள் என்று சொல்கிறோம். தன் உயிர் முழுவதுமே அவனிடம்தான் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவள் நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளது அன்பின் பாதியோ, அதிகமோ குழந்தையிடம் செல்கிறது. கணவனிடம் முன்பு இருந்தது போல் தனக்கு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதேபோல் தான் தந்தையும். முன்பைவிட ஆழ்ந்த அன்பைச் செலுத்த ஓரிடம் கிடைத்தால் பழைய அன்பு மெதுவாக மறையத் தொடங்குகிறது. நீங்கள சிறுவர்களாக இருந்தபோது தாய்தந்தையர் அல்லது பள்ளித் தோழர்கள் சிலரை இவர்கள் தான் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறக்கின்றன, புதிய அன்பு உணர்ச்சிகள் தீவிரம் அடைகின்றன. ஒரு வீண்மீன் தோன்றுகிறது, பிறகு இன்னும் பெரிய ஒன்று தோன்றுகிறது, அதன் பிறகு அதைவிடப் பெரியது தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றியதும் சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்தச் சூரியனே கடவுள். விண்மீன்களே சிறிய அன்புகள் . அந்த இறையொளி மனிதன் மீது படும்போது, ஒருவன், எமர்சன் கூறுவதுபோல் 'இறைப்பித்தன்' ஆகிறான், இறுதியில் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக்கடலில் எல்லாம் கரைந்துவிடுகின்றன.